வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (07/08/2018)

கடைசி தொடர்பு:09:20 (07/08/2018)

`ருசியாகச் சமைக்கச் சொல்வது ஒன்றும் சித்ரவதை ஆகாது' - மும்பை உயர் நீதிமன்றம் கருத்து! 

ருசியாகச் சமைக்கச் சொல்வது ஒன்றும் மனைவியைக் கொடுமைப்படுத்துவது கிடையாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ஷிண்டே. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. விஜய்யும், அவரின் அம்மாவும் சேர்ந்து ஒழுங்காக வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், ருசியாகச் சமைக்கக் கோரியும் அந்தப் பெண்ணை தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதேபோல், விஜய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் ஷிண்டேயின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெண் வீட்டார் விஜய் மீது வழக்குத் தொடுத்தனர். 

இதில் அவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது பேசிய நீதிபதி சாரங் கோட்வால், ``ருசியாகச் சமைக்கச் சொல்வதும், வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வது ஒன்றும் மனைவியைக் கொடுமைப்படுத்துவது ஆகாது. இது ஒன்றும் சித்ரவதை எனக் கூற முடியாது. மனைவியை விஜய் கொடுமைப்படுத்தினார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவரைக் குற்றவாளி எனக் கூறமுடியாது" என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க