மந்திரவாதியால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! சிக்கவைத்த பக்கத்து வீட்டார்

அடுத்துப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டி, தங்களின் மூத்த மகளைப் பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. 

கொலை

Photo Credit: ANI

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள சாவ்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தனது 6 வயது குழந்தையைக் கொலை செய்து வீட்டிலேயே புதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கத்து வீட்டார் அளித்த புகாரையடுத்து, வீட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை போலீஸார் கண்டெடுத்துள்ளார். 

கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் எதற்காக மகளைக் கொலை செய்தீர்கள் என்று போலீஸார் கேட்டதற்கு, `எங்களின் மூத்த மகள் இவள். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாள். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மருந்து மாத்திரை என அனைத்தையும் கொடுத்து சரி செய்து விடலாம் என முயற்சி செய்தோம். ஆனால், பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, மந்திரவாதி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர், `குழந்தையைக் கொன்றுவிட்டு, அவளது உடலை வீட்டில் புதைத்து விடும்படி அறிவுறுத்தினார். இதைச் செய்தால்தான், அடுத்துப் பிறக்கவிருக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்றார். மந்திரவாதியின் அறிவுறுத்தல்படியே குழந்தையைக் கொன்று புதைத்து விட்டோம்' என்றனர். குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்ததாக, இறந்த குழந்தையின் பாட்டி போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, பெற்றோர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், `குழந்தையின் வயிற்றில் உணவு இருந்ததற்கான அடையாளம் சிறிதுகூட இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போலீஸார் மேலும் விசாரணையைத் துரிதப்படுத்தி இருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!