வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/08/2018)

கடைசி தொடர்பு:14:50 (07/08/2018)

`நள்ளிரவில் செல்வார்கள்; காலையில் வருவார்கள்; நாள் முழுவதும் அழுவார்கள்'- பதறவைக்கும் சிறுமியின் வாக்குமூலம்

‘நள்ளிரவில் காப்பகத்தில் இருந்து நிறைய பெண்களை கார்களில் அழைத்துச் செல்வார்கள் அவர்கள் காலையில் திரும்பி வருவார்கள். நாள் முழுவதும் அந்தப் பெண்கள் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பார்கள்’ கோரக்பூர் காப்பகத்தில் இருந்து தப்பி வந்த 10 வயது சிறுமியின் வாக்குமூலம்.

சிறுமி

Photo Credit: Ani

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் இருந்து தப்பி வந்த 10 வயது சிறுமி காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் ``தான் தங்கியிருந்த பெண்கள் காப்பகத்தில் 15-18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கின்றனர். நான் 3 வருடமாக இந்தக் காப்பகத்தில் தங்கி இருக்கிறேன். ஒரு வேலைக்காரி போன்றே அவர்கள் என்னை நடத்தினர். இரவு நேரத்தில் காப்பகத்திலிருந்து நிறைய பெண்களை கார்களில் அழைத்துச் செல்வார்கள். அவர்கள் காலையில் திரும்பி வருவார்கள். அந்த நாள் முழுவதும் அவர்கள் அழுதுகொண்டே இருப்பார்கள். சிவப்பு, கறுப்பு என பல நிறங்களில் கார்கள் வரும். பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருக்கும். சிறுமிகளைக் காப்பகத்தில் உள்ள பணிகளைச் செய்யச் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் பணிகளைச் செய்யவில்லை என்றால் அங்குள்ள ஆண்கள் அடிப்பார்கள். சில சமயங்களில் எங்கள் காப்பகத்தில் இருக்கும் பெண்களை கோரக்பூருக்கு அனுப்புவார்கள் நானும் அவர்களுடன் சில சமயங்களில் சென்றுள்ளேன். ஒவ்வொருவரும் இரண்டு ஆண்களுடன் அறைக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். நான் வெளியில் அமர்ந்திருப்பேன். காப்பகத்திலிருந்து 8 வயது மதிக்கத்தக்க சிறுமியை பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுத்தாகச் சொன்னார்கள். உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை” என்றார்.

சிறுமி அளித்த தகவலையடுத்து காவல்துறையினர் உடனடியாக அந்தக் காப்பகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதையடுத்து காப்பகத்திலிருந்து 24 பெண்கள் மீட்கப்பட்டனர். காப்பக உரிமையாளர் கிரிஹா திரிபதி, அவரின் கணவர் மோகன் திரிபதி மற்றும் அவர்களது மகள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்தக் காப்பகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ``காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் உதவி செய்துவருகின்றனர். இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.