வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (07/08/2018)

கடைசி தொடர்பு:15:10 (07/08/2018)

நடுக்கடலில் கப்பல் மோதியதில் சுக்குநூறான படகு! 3 மீனவர்கள் பலி; 9 பேர் மாயம்

கேரள ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

படகு விபத்து

கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவரது ஓசியானஸ் என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம், கேரளம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று மாலை முனம்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் ஆழ்கடலில்  மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியுள்ளது. இதில் படகு சுக்குநூறாக உடைந்துள்ளது. படகில் இருந்த 15 மீனவர்களும் கடலில் விழுந்துள்ளனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நரேன்சர்க்கார் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் என 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மீனவர்களுடைய உடல்கள் விசைப்படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விசைப்படகு மீது மோதிய கப்பல் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து கேரள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிக்கு கப்பல் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அதிகமான கப்பல்கள் அந்த வழியாகச் சென்றுள்ளதாகவும் அதில் படகு மீது மோதியது எது என்பதைக் கண்டுபிடிக்க மும்பை துறைமுகத்தின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``விபத்துக்குள்ளான படகை ஓட்டியவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஏசுபாலன் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. எனவே, குமரி மாவட்ட மீனவர்கள் அந்தப் படகில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பிலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.