வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (07/08/2018)

கடைசி தொடர்பு:15:50 (07/08/2018)

5.5 லட்சத்துக்கு ஏலம்போன மீன்! - சகோதரர்களுக்கு அடித்த ஜாக்பாட்

மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்களுக்கு அடித்தது ஜாக்பாட். வலையில் சிக்கிய அரிய வகை மீனை ஏலத்தில் விட்டத்தில், அவர்களுக்கு ரூ.5.5 லட்சம் கிடைத்துள்ளது. 

மீன்

மும்பை-பால்கர் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மகேஷ் மெஹர் மற்றும் பரத் என்ற சகோதரர்கள் வலையில் அரியவகை மீன் ஒன்று சிக்கியிருக்கிறது. கோல் (ghol) என்ற ஒரு ரக மீன் அவர்களது வலையில் சிக்கியது. மீன்களைப் பிடித்த பிறகு, முர்பே கடற்கரைக்குத் திரும்பிய அவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. இவர்கள் வலையில் சிக்கிய கோல் ரக மீன்கள், தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, உயர்தர மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாம் தரத்தில் உள்ள மீன்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்த வகை மீன்களில் கறுநிறப் புள்ளிகள் காணப்படும்.

மேலும், உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ மீன் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மகேஷ் மெஹர் வலையில் சிக்கிய கோல் ரகத்தைச் சார்ந்த மீன் 30 கிலோ எடையுடையது. அதுவும் உயர்தர மீன். கிழக்கு ஆசிய பகுதியில் இவ்வகை உயர்தர கோல் மீன்கள் மருத்துவ பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படுகிறது. 30 கிலோ எடை கொண்ட கோல்மீன் ஏலத்தில் ரூ.5.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டனர் மகேஷ் மெஹர் மற்றும் பரத். 

இதுகுறித்து மகேஷ் கூறுகையில், `உயர்தர கோல் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. கோல் மீன்கள் வலையில் சிக்குவது லாட்டரி அடித்ததற்குச் சமம். மீனை விற்றதில் கிடைத்த பணத்தின் மூலம், நிச்சயம் என் நிதி நெருக்கடியைச் சமாளித்துவிடுவேன். முதலில், எனது சாய் லட்சுமி (அவரது படகு) மற்றும் வலையைச் சரி செய்வேன்' என்றார்.