வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (07/08/2018)

`மகளிர் இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிறார்கள்... ஆனால்?' - மாநாட்டில் கொதித்த ராகுல்

`மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க முன்வந்தால், காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும்' எனப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

மாநிலங்களவையில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த 2010-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, `மக்களவையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ராகுல், `இந்த நாட்டை ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தம். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. பாலியல் குற்றங்கள் குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து பா.ஜ.க-வினர் அதிகமாகப் பேசி வருகின்றனர். ஆனால், நீண்ட காலமாக மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க முன்வந்தால், காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும். வரும் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன், மசோதாவை நிறைவேற்றுவோம்' என்றார்.