கைத்தறியை கைவிடும் 50 லட்சம் தொழிலாளர்கள்..! எதிர்காலம் என்ன?! #NationalHandloomDay

கைத்தறியை கைவிடும் 50 லட்சம் தொழிலாளர்கள்..! எதிர்காலம் என்ன?! #NationalHandloomDay

1905 ஆகஸ்ட் 7-ம் தேதி `சுதேசி இயக்கம்' தொடங்கப்பட்டது. இந்த நாளில்தான், நம் நாட்டில் திணிக்கப்பட்ட மேற்கத்திய கலாசாரத்தை எதிர்க்க, குறிப்பாக, உடைகளின் தாக்கத்தைத் தகர்த்து ஏறிய முடிவு செய்யப்பட்டது. அதன் நினைவாக இந்த நாளையே `தேசிய கைத்தறி தினமாக'  2015 -ல் மத்திய அரசு அறிவித்தது.

Handloom


`வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, இந்தியா. எண்ணற்ற கலாசாரங்கள், பழைமைவாய்ந்த மொழிகள் என இந்தியாவின் ஈடுஇணையற்ற பெருமைகளில் ஒன்று கைத்தறி ஆடைகள். விவசாயத்துக்கு அடுத்து நம் நாட்டின் வலுவான தூணாக இருந்தது. தற்போதும் ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் கைத்தறி ஆடை தயாரிப்பு களத்தில் இருக்கின்றனர். உலகளவில் 95 சதவிகித கைத்தறி ஆடைகள், இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றன.


எத்தனை ஃபேன்சி ஆடைகள் வந்தாலும், கைத்தறியின் `க்ளாஸிக்' தோற்றத்துக்கு இணை வேறெதுவும் இல்லை. இன்றும்கூட, தான் உடுத்திய திருமணப் புடவையை மகள் அவளின் திருமணத்துக்கு உடுத்தும் உணர்ச்சிமிக்க தருணம் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாய் கடந்து வரும் பாரம்பர்ய பொக்கிஷங்களில் ஒன்று `கைத்தறி'யும்தான். 

Keerthi Suresh


ஆனால், இதன் வளர்ச்சி குன்றிக்கொண்டே வருகிறது என்பதுதான் நிதர்சனம். பரம்பரை பரம்பரையாகக் கைத்தறியில் நெய்தவர்கள்கூட விசைத்தறிகளை உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலை நீடித்தால் கைத்தறிகளை பொருள்காட்சியில்தான் பார்க்க நேரிடும். இதற்கு ஒருவகையில்  நாமும் ஒரு காரணம். உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத, `ஆர்கானிக்' அல்லது `கைத்தறி' ஆடைகளை ஒதுக்கிவிட்டு, ரசாயன சாயங்களில் தோய்த்தெடுத்து, பளபளவென பாலிஷ் செய்து வரும் `இறக்குமதி' ஆடைகளை லட்சங்கள் செலவழித்து வாங்குகிறோம். இதனால், கைத்தறியின் வளர்ச்சி மொத்தமாக ஒடுங்குகிறது. இது நீடித்தால் மீண்டும் ஒரு `சுதேசி இயக்கம்' தொடங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையைத் தன்னால் முடிந்தளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கவுரங் ஷா. ஆடை வியாபாரம் செய்துவந்த தன் தந்தையோடு பயணித்த கவுரங், இளம் பெண்களுக்குக் கைத்தறி மீதான ஈடுபாடு குறைவதைக் கவனித்தார். விதவிதமான டிசைன்கள் கொண்டிருக்கும் ஜியோர்ஜெட், சிஃபான் போன்ற புதுவகையான துணிகள்மீது பெண்களின் கவனம் செல்வதையும் கவனித்தார். விசைத்தறிகளின் வளர்ச்சி இவரை மிகவும் பாதித்தது. கைத்தறியின் அழிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல், தான் ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்றும், தான் வடிவமைக்கும் ஆடைகள் அனைத்தையும் கைத்தறியால் மேட்டுமே செய்யவேண்டும் என்றும் முடிவு செய்தார்.

நினைத்தது போலவே, தன் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், `ஜம்தானி' நெசவாளர்களைச் சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார். முதலில், முடியாது என்று மறுத்த விசைத்தறி நெசவாளர்களும், கைத்தறியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு ஆடைகளை நெய்ய ஆரம்பித்தனர். அன்று முதல் இன்று வரை கைத்தறி ஆடைகளை மட்டுமே இவர் வடிவமைத்து வருகிறார். 

Gaurang Shah


சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்த புடவைகளை வடிவமைத்தவரும் கவுரங் ஷாதான். அத்தனையும் கைத்தறியால் உருவானவை. இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பிடிக்கும் வகையில் ஆடைகளை வடிவமைத்து, கைத்தறியை விடாமல் இறுகப் பிடித்திருக்கும் கவுரங் ஷா, வித்யா பாலன், சோனம்கபூர், ஸ்ருதி ஹாசன் போன்ற பல பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட். முதலில் ஜம்தானி துணிவகையில் ஆரம்பித்த இவரின் பயணம், பிறகு காஞ்சிபுரம், உப்படா, பைத்தானி, காதி, பதான் பட்டோலா, பெனாரசி, கோட்டா, மஹேஸ்வரி எனப் புதுமையான டிசைன்களை நோக்கி நீள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!