வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (09/08/2018)

கடைசி தொடர்பு:12:30 (09/08/2018)

`கிகி சேலஞ்ச்’சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ‘க்ளீன் அப் சேலஞ்ச்’

கிகி சேலஞ்சில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ரயில்வே நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது.

மும்பை


`கிகி சேலஞ்ச்’ என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என விநோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். கனடாவின் பிரபல  ‘ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings'  பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி. இதைத்தொடர்ந்து வில் ஸ்மித் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட இளைஞர்கள் மத்தியில் இது பிரபலமானது.

உலகம் முழுவதும் பிரபலமான இந்த ‘கிகி சேலஞ்ச்’ இந்தியாவுக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியது. இந்திய இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ஒரு சிலரின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொதுஇடத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில், மும்பையில், ரயில் நிலையத்தில் மூன்று இளைஞர்கள் நடைமேடையில்  ‘கிகி சேலஞ்ச்’ என்ற பெயரில் நடனமாடியுள்ளனர். அதை ஓடும் ரெயிலில் இருந்து படம் பிடித்துள்ளனர். இந்த ஆபத்தான விளையாட்டை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த மூன்று இளைஞர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மும்பையைச் சேர்ந்த நிஷாந்த் ஷா (20), துருவ் ஷா (23), ஷ்யாம் ஷர்மா ( 24) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த இளைஞர்கள் மூன்று பேரும் வாசை (Vasai) ரயில் நிலையத்தை மூன்று நாள் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். பகல்11 முதல் 2 மணி வரை, மாலை 3 முதல் 5 மணிவரை இந்தப்பணிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளனர். ‘கிகி சேலஞ்ச்’ சாகசத்தில் கைது செய்யப்பட்டவர்களைக் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.