வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (09/08/2018)

கடைசி தொடர்பு:15:10 (09/08/2018)

மாநிலங்களவை துணை சபாநாயகராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு!

மாநிலங்களவை துணை சபாநாயகராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹரிபிரசாத்தைவிட 20 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். 

மாநிலங்களவையில் துணை சபாநாயகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் இரண்டுமுறை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஜே.குரியன். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இப்பதவிக்கான தேர்தல் தேதியை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், எம்.பி.ஹரிவன்ஷ் , எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் நேற்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாநிலங்களவையில் மொத்தம் 244 உறுப்பினர்கள் இருந்தனர். பரபரப்பான சூழலில் நடைபெற்ற வாக்குப்பதிவில், பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எம்.பி.ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்றார். இவரை, எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். இதனால், 20 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி.ஹரிவன்ஷ் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்தார். இந்த வாக்கெடுப்பில், தி.மு.க உறுப்பினர்கள் 4 பேர் கலந்துகொள்ளவில்லை. 

மோடி

மாநிலங்களவை துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, `மாநிலங்களைவை சார்பாக ஹரிவன்ஷ் நாரயண் சிங்குக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது எழுத்து திறனால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்' என்று பாராட்டிப் பேசினார்.