வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (09/08/2018)

கடைசி தொடர்பு:20:02 (09/08/2018)

மாநிலங்களவையின் புதிய துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்... யார் இவர்?

மாநிலங்களவையின் புதிய துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்... யார் இவர்?

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினரான பி.கே. ஹரிபிரசாத் போட்டியிட்ட போதிலும், வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மற்றுமொரு முக்கியமான நாள். ஆம். மாநிலங்களவை துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்ற தினம். மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்த பி.ஜே. குரியனின் பதவிக்காலம், கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வுபெற்ற பின்னர், மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில், ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பி.கே. ஹரிபிரசாத் போட்டியிட்டார். இந்தப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டதை அடுத்து, மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆளும் கூட்டணி வேட்பாளரான ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இது, மெஜாரிட்டி அளவான 119 என்ற எண்ணிக்கையை விடவும் 6 வாக்குகள் அதிகம் ஆகும். காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரி பிரசாத்துக்கு 105 வாக்குகளே கிடைத்தன. இதனால் அவர் தோல்வியடைந்தார்.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு மக்களவையில் தனிப் பெரும்பான்மை உள்ள போதிலும், மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்கு போதிய பெரும்பான்மை இல்லாதது, அக்கட்சிக்கு பல்வேறு தருணங்களில் சங்கடத்தை அளித்து வந்தது. எனினும், மாநிலங்களவைத் தலைவராக (குடியரசுத் துணைத் தலைவர்) பி.ஜே.பி-யைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது துணைத் தலைவராக பி.ஜே.பி. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிவன்ஷ் நாராயண் சிங் - ஐக்கிய ஜனதா தளம்

ஆளும் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவருடைய வெற்றி உறுதி செய்யப்பட்டது. பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், ஆளும் கூட்டணி வேட்பாளரை தங்கள் கட்சி ஆதரிக்கும் என்று பிஜூ ஜனதா தளம் அறிவித்தது. இதையடுத்து, 244 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், ஆளும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 125 பேர் வாக்களித்தனர். இந்த வெற்றிக்கு முன்னதாக, பி.ஜே.பி. மீது காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்தது. மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க, பல யுக்திகளை ஆளும் பி.ஜே.பி. தரப்பு பல பிரயத்தனங்களைக் கையாண்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதும், கடந்த மாதத்தில் தெலுங்குதேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஆளும் கூட்டணி அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து வெற்றிபெற்ற நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலிலும் வெற்றியடைந்திருப்பது அக்கட்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை, இந்தப் பதவியில் அமர வைத்ததன் மூலம், கூட்டணிக் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில்லை என்ற பி.ஜே.பி. மீதான குற்றச்சாட்டில் இருந்து அக்கட்சி மீண்டுள்ளது.

மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் உருவான பாலியா தொகுதியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் மாநிலங்களவைத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர் சிறப்பாகப் பணியாற்ற தமது வாழ்த்துகள் என்று மோடி தெரிவித்தார். மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

யார் இந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்?

ஹரிவன்ஷ் நாராயண் சிங் - ஐக்கிய ஜனதா தளம்

மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றி உள்ளார். 1956-ம் ஆண்டில் பிறந்த இவர், பீகார் மாநிலம் பாலியா பகுதியைச் சேர்ந்தவர். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2014-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், பி.ஜே.குரியனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் துணைத் தலைவராகியுள்ளார். வெங்கய்யா நாயுடு அவையில் இல்லாதசமயத்தில் மாநிலங்களவையை ஹரிவன்ஷ் நாராயண் வழிநடத்துவார்.

ஹரிவன்ஷ் நாராயண் சிங்கைத் தேர்வுசெய்ததன் மூலம் பி.ஜே.பி, புதிய யுக்தியை கையாண்டிருப்பதாகவே தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல பி.ஜே.பி. திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆளும் கூட்டணியில் ஏற்கெனவே சிவசேனா அதிருப்தியுடன் உள்ள நிலையிலும், தெலுங்குதேசம் கூட்டணியை விட்டு வெளியேறி விட்ட நிலையிலும், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வெளியேறி விடக்கூடாது என்பதால், அக்கட்சிக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை அளித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துவிட்டால், பீகாரில் பி.ஜே.பி-க்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதியே இந்த முடிவை பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் எடுத்திருக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஹரிவன்ஷூக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை அளித்ததன் மூலம் பி.ஜே.பி. கூட்டணியை விட்டு ஐக்கிய ஜனதா தளம் வெளியேற முடியாமல் செக் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, பி.ஜே.பி. இப்போதே போடும் கணக்கு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க