ஆதார் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

மத்திய அரசின் டிராய் அமைப்பின் தலைவரான ஆர்.எஸ்.ஷர்மாவின் பதவிக்காலத்தை 2020-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆர் எஸ் ஷர்மா

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஆர்.எஸ்.ஷர்மா, சமீபத்தில் ஆதார் எண் சர்ச்சைமூலம் பிரபலமானார். தனிநபர் அடையாள அட்டையான ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சமீபத்தில் ட்விட்டரில் சர்ச்சைகளும், விவாதங்களும் ஏற்பட்டது. அப்போது, ட்விட்டர் பயனாளர் ஒருவர் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவிடம்,`உங்களது ஆதார் தகவல்களை வெளியிட முடியுமா?' எனக் கேட்டவுடன், உடனடியாக அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிட்டு, `இதனால் தனக்கு என்ன தீங்கு இழைத்துவிட முடியும்' என்று கேள்வி எழுப்பினார். 

இதைப் பயன்படுத்திக்கொண்ட ஹேக்கர்கள், ஆர்.எஸ்.ஷர்மாவின் ``மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண்" ஆகியவற்றை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர். போதாக்குறைக்கு அவருடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் டெப்பாசிட் செய்தும் அதிர்ச்சி அளித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, ஆர்.எஸ்.ஷர்மாவின் பெயரும் பிரபலமானது. இந்நிலையில், ஆர்.எஸ்.ஷர்மாவின் டிராய் அமைப்பின் தலைவர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.ஷர்மாவின் பதவிக்காலத்தை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடியும் வரை அவர் இந்தப் பதவியில் நீட்டிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!