வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/08/2018)

கடைசி தொடர்பு:08:00 (10/08/2018)

கேரளாவில் கனமழை: சாலையை இரண்டாகப் பிளக்கும் வெள்ளம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழையால், மாநிலம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது. 

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மாநிலத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்துவருகிறார்கள். மாநிலத்தின் மிக முக்கியச் சாலைகள் மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், மழைக்கு 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதிலும் உள்ள 22 அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மலப்புரம், இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலும், மலப்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலை ஒன்று வெள்ளத்தால் சேதம் அடையும் காட்சி காண்போரை வியப்படையச் செய்கிறது.