வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (10/08/2018)

கடைசி தொடர்பு:09:26 (10/08/2018)

காதலனுடன் உல்லாசம் - கணவனை ஸ்ப்ரே அடித்துக் கொலை செய்த மனைவி

கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த தன் கணவனை கொலை செய்ய பூச்சிக்கொல்லி மருந்தின் உதவியை நாடிய மனைவி. போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம். 

பூச்சிக்கொல்லி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஃப்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவிகா மற்றும் ஜகன் நாயக் தம்பதி. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன் கணவனின் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மிளகாய்ப் பொடியை தூவி கொடூரமாக கொலை செய்துள்ளார் தேவிகா. இவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்புப் மேலாளராக பணிபுரிந்து வருபவர் பானர்ஜி. இவருடன் தேவிகாவுக்கு நீண்டகாலமாகக் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில், இவர்களின் தொடர்பை அறிந்துகொண்ட ஜகன் நாயக், தன் மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், தேவிகா பானர்ஜியுடனான தொடர்பை முறித்துக்கொள்ளத் தயாராக இல்லை. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜகன் நாயக். அப்போது, இருவருக்கும் இடையில் கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது தேவிகாவை பலமாகத் தாக்கியுள்ளார் ஜகன். இதனால், ஆத்திரம் அடைந்த தேவிகா ஜகனை கொலை செய்து விடலாம் என முடிவு செய்துள்ளார்.

அப்போது, பானர்ஜிக்கு போன் செய்த தேவிகா, 'நமது தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ஜகனை கொலை செய்துவிடலாம்' என்று கூறியிருக்கிறார். தேவிகா வீட்டுக்கு வந்த பானர்ஜி, பூச்சிக்கொல்லி மருந்தைக் கையில் எடுத்து வந்திருக்கிறார். தேவிகா-பானர்ஜி இணைந்து ஜகன் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை ஸ்ப்ரே செய்துள்ளனர். மேலும், மிளகாய்ப் பொடியையும் தூவி உள்ளனர். இதனால், மயக்கம் அடைந்த ஜகன், சிறிது நேரத்துக்குப் பிறகு கண் விழித்துள்ளார். அப்போது, அவரது தலை மற்றும் மார்புப் பகுதிகளில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜகன் உயிரிழந்துள்ளார்.

பூச்சிக்கொல்லி

இதனிடையில், கணவன் மனைவிக்கிடையில் நடந்த சண்டையில் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்கிறார் வீட்டு உரிமையாளர். அவரிடம், `குடித்துவிட்டு, ஜகன் என்னைக் கடுமையாகத் தாக்கினார். அவரிடமிருந்து தப்பிக்க அவரைத் தாக்கினேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் கள்ளத் தொடர்பை நீடித்துக்கொள்ள தேவிகா மற்றும் பானர்ஜி கூட்டாக இணைந்து ஜகனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது' என்றார். கொலைக்குப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மிளகாய்ப் பொடியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.