வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (10/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (10/08/2018)

``இடஒதுக்கீடு பற்றி ராமதாஸ் கருத்தை ஏற்கிறேன்!" வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா

ராமதாஸ் சொன்னார் என்பதற்காக அல்ல... இது நீண்டநாள் எதிர்பார்ப்பு! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம்

``இடஒதுக்கீடு பற்றி ராமதாஸ் கருத்தை ஏற்கிறேன்!

மராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, ``அரசுத் துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்து வருகிறது. தொழில்நுட்பம் காரணமாகவும் வங்கிகளுக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. இந்தச் சூழலில் இடஒதுக்கீடு வழங்கினால்கூட அரசுவேலை எப்படிக் கிடைக்கும்..." எனக் கேட்டிருக்கிறார். 

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறும்போது, ``அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாமல் இல்லை. கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பல்வேறு துறை மந்திரிகள் தெரிவித்த தகவலின்படி 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தாலே இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சமூகநீதி வழங்க முடியும். அதைவிட்டு இடஒதுக்கீட்டால் பயனில்லை எனப் பேசுவது முறையல்ல. சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, வேலைவாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இடஒதுக்கீடு தேவையில்லை என முடிவுக்கு வருவது ஆபத்தானது. 

நிதின் கட்கரி விகடன் இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டால் மக்கள் பயனடையும் அளவுக்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்பு இல்லையெனச் சொன்னால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்தியஅரசு முன்வர வேண்டும். இதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அரசியலைப்பு சட்ட அங்கீகாரத்துடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டவுடன் இதன் மூலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்த பா.ம.க நடவடிக்கை எடுக்கும்" எனச் சொல்லியிருக்கிறார். 

தனியார் நிறுவனங்களில், இடஒதுக்கீடு அவசியம் என்பது குறித்து சில நாள்களாகப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னாவிடம் பேசினேன். 

``இந்த அறிக்கையில் ராமதாஸுடன் முழுதும் உடன்படுகிறேன். ராமதாஸ் சொன்னார் என்பதற்காக அல்ல... இது நீண்டநாள் எதிர்பார்ப்பு! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவையா என மேலோட்டமாகக் கேள்வி எழுப்புகிறவர்களுக்குச் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 

முதல் விஷயம்... தன் குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமை. `எங்களுக்கு வசதி இல்லை. மாதம் இவ்வளவு பணம் கொடு' என எந்தக் குடிமகனும் கேட்கவில்லை. வேலைக்கான வாய்ப்பைக் கொடு என்றுதான் அரசாங்கத்திடம் கேட்கிறோம். 

இடஒதுக்கீடு ராமதாஸ்

இரண்டாவது விஷயம்... தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்பது வெறும் வேலைவாய்ப்புக்கானது மட்டும் இல்லை. அது தார்மிக உரிமையும்கூட. ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எல்லாவிதமான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ்வரும் நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம், குடிநீர் எனப் பல வசதிகளை செய்து கொடுக்கிறது. இவையெல்லாம் மக்களுடைய வரிப்பணம்தானே... அதற்கு ஈடாக அந்த மக்களுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்குகிறீர்கள் என்றால், அந்த மக்களுக்குள் நிலவுகிற ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இன்று அது இல்லாதிருக்கும்  பட்சத்தில்தான் பல தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே பணியில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வேலையை சிபாரிசும் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்தச் சமூகத்துக்கான நிறுவனமாக மட்டுமே அது மாறுகிறது. இதற்கான தீர்வு... தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதுதான். எல்லாத்தரப்பு மக்களும் பணிபுரியக்கூடிய இடமாகத் தனியார் நிறுவனங்கள் மாறவேண்டும். எந்த முன் அனுபவமும் இல்லாதவருக்குக்கூட சிறப்புப் பயிற்சிக் கொடுத்தால், திறம்படச் செயல்படக்கூடிய அளவுக்கு அவரை மாற்றிவிட முடியும். திறமையைத்தான் பார்க்கிறோம் எனத் தனியார் நிறுவனங்கள் சொல்லுமேயானால், அது பழைமைவாதம் மட்டுமே.

கௌதம சன்னா

தனியார் நிறுவனங்களிடம் இந்தச் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அரசு கொடுக்கும் வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபத்தை எடுத்துக்கொண்டு செல்பவர்கள். அரசாங்கம்தான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களுக்குத்தான் இதில் முழுப்பொறுப்பு இருக்கிறது. இதன் இன்னொருபுறம், இடஒதுக்கீடு பற்றிய தெளிவான விவாதங்கள் மக்களிடையே நடக்க வேண்டும். அது ஏன் கொண்டுவரப்பட்டது என்பதைச் சமத்துவ நோக்கில் ஆராய வேண்டும். உளவியல் ரீதியாக அது ஏற்படுத்தும் தாக்கங்களை நண்பர்கள் பேசிக்கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் அதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல், சாதிப் பெருமிதங்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். சாதியொழிப்பு பேசுகிறவர்களையும் சாதிவெறியர்களாக சித்திரிக்கிறார்கள். ஆனால், இது விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பிற்போக்குத்தனம் அதனுடன் போட்டி போட முடியாது. நாம் பெருமிதங்களைக் கைவிட்டு எதார்த்தத்தை நோக்கி ஓடும்போதுதான், சமூகநீதி பற்றிய புரிதல் கிடைக்கும். இடஒதுக்கீட்டின் நியாயங்கள் புரியும். தனியார்துறையிலும் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும். இவையெல்லாம் நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். காலம் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது" என்கிறார் நம்பிக்கையுடன்!


டிரெண்டிங் @ விகடன்