`கவிதை, குட் நைட், இதை ஷேர் செய்யலன்னா..!’ - ரயில்வே துறையைத் திணறடித்த வாட்ஸ்அப்வாசிகள்

ஃபார்வார்டு மெசேஜ்களால் நேரத்தை வீணடிக்கிறார்கள் - கவலைப்படும் ரயில்வே நிர்வாகம்

`கவிதை, குட் நைட், இதை ஷேர் செய்யலன்னா..!’ - ரயில்வே துறையைத் திணறடித்த வாட்ஸ்அப்வாசிகள்

ந்தியர்களைப் பற்றி வெளிநாடுகளில் பொதுவான எண்ணம் ஒன்று உண்டு. இந்தியர்களுக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என்பதுதான் அது. வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் எதிர்பட்டால் கூட ஒரு ஹாய் சொல்லி விட்டுப் போவார்கள். இது தவிர குட் மார்னிங், குட் நைட் போன்றவை அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள். ஆனால், நம் நாட்டில் நிலைமை வேறு. இங்கே காலை வணக்கம், மாலை வணக்கம் போன்ற வார்த்தைகளை யாரும் அதிகமாகப் பயன்படுத்த மாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் நிலைமை அப்படித்தான் இருந்தது, வாட்ஸ்அப் என்ற ஒன்று வரும் வரை.

வாட்ஸ்அப்

இன்றைக்குக் காலையில் எழுந்ததும் பலரின் முக்கியக் கடமை வாட்ஸ்அப் லிஸ்டில் இருப்பவர்களுக்கு குட் மார்னிங் என்ற செய்தியை அனுப்புவதுதான், அப்படியே மதியம் ஒன்று, இரவு ஒன்று எனத் தினமும் வணக்கத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இது தவிர்த்து பல மெசேஜ்களை யோசிக்காமல் ஃபார்வார்டு செய்யும் கடமையையும் நிறைவேற்றுகிறார்கள். இந்தியர்கள் வாட்ஸ்அப்பை இப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதை அதை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி அனுப்பப்பட்ட ஃபார்வேர்டு மெசேஜ்களால் திணறிப் போயிருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

ஃபார்வேர்டு மெசேஜ்களால் பதறும் ரயில்வே

காலத்துக்குத் தகுந்தவாறு அரசுத் துறைகளும் டிஜிட்டலுக்கு அப்டேட் ஆகிக் கொண்டிருக்கின்றன. புகார்களைத் தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் நம்பர்களை சில துறைகள் பயன்படுத்துகின்றன. துறை தொடர்பாக ஏதேனும் குறைகளோ புகார்களோ இருந்தால் மக்கள் அதைத் தெரிவிப்பதற்காகவே இந்த வசதி. அப்படிக் கொடுக்கப்பட்ட ரயில்வேயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்து குவிந்திருக்கின்றன ஃபார்வேர்டு மெசேஜ்கள். கடந்த வாரம் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட போது மறக்காமல் நண்பர்கள் தின வாழ்த்துகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

வாட்ஸ்அப்

கடந்த ஜூலை 31-ம் தேதியன்று மேற்கு ரயில்வேயும், மத்திய ரயில்வேயும் இந்த சேவையைத் தொடங்கி வைத்தன. 90044 99773 என்ற எண்ணை மேற்கு ரயில்வேயும், 99876 45307 என்ற எண்ணை மத்திய ரயில்வேயும் மக்களுக்குக் கொடுத்திருந்தன. இதன் மூலமாகப் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு குறைகள் சரி செய்யப்படும் என்பதுதான் ரயில்வேயின் திட்டம். ரயில் நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தாலோ ரயிலில் கழிவறைகள் சுகாதாரமின்றி காணப்பட்டாலோ இதில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர்த்து துறை தொடர்பாக எந்தவித புகார்கள் இருந்தாலும் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வேயின் எண்ணம் இப்படியிருக்க மக்களின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அந்த எண்களில் புகார்கள் வந்தது உண்மைதான். ஆனால், அதை விட அதிக எண்ணிக்கையில்  தேவையற்ற ஃபார்வேர்டு மெசேஜ்கள் வரத் தொடங்கின என்று கவலைப்படுகிறது ரயில்வே நிர்வாகம். இந்த வாரத்தில் வந்த புகார்களில் 25 மட்டுமே உண்மையானவை, அதை விட அதிக எண்ணிக்கையில் ஃபார்வேர்டு மெசேஜ்கள்தாம் வந்திருக்கின்றன. ``எங்களுக்கு அதிகமாக குட் மார்னிங், குட் ஈவ்னிங் போன்ற மெசேஜ்கள் வந்தன. அவை தவிர்த்து பக்திமயமான ஃபார்வேர்டு மெசேஜ்கள் வந்தன. கவிதைகளைக் கூட சில சமயம் பார்க்க முடிந்தது" எனத் தெரிவித்திருக்கிறார் அதிகாரி ஒருவர்.

ரயில்வே

``தினமும் பெறப்படும் தேவையற்ற மெசேஜ்களை அழித்துவிடும் படி எங்கள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இது போன்று வரும் மெசேஜ்களில் ஒரு சில மட்டும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக `இதை 15 பேருக்கு ஃபார்வேர்டு செய்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும்' என்பது போன்ற மெசேஜ்கள் அதிகமாக வருகின்றன. இவை எங்களுடைய நேரத்தை வீணடிக்கின்றன" என்றும்  மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

காலம் காலமாக ரயில்வேதான் மக்களை திணறடிப்பது வழக்கம், ஐஆர்சிடிசியில் ஒரு டிக்கெட்டை புக் செய்வதற்குள்ளாக ஒரு யுகத்தையே கடக்கவேண்டியிருக்கும். ஆனால், தற்பொழுது வழக்கத்துக்கு மாறாக ரயில்வேயைப் பதற வைத்திருக்கிறார்கள் நமது மக்கள்.

வாசித்து முடித்ததும் மறக்காமல் இந்தக் கட்டுரையை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து விடவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!