36 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டுக் காற்றை சுவாசிக்கவுள்ள கஜானந்த் சர்மா!

பாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த கஜானந்த் சர்மா தற்போது இந்தியா திரும்ப உள்ளார். தாயகம் திரும்பும் அவரை விமர்சையாக வரவேற்க அவரது குடும்பத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

சிறை

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சமோட் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கஜானந்த் சர்மா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1982-ம் ஆண்டு வீட்டைவிட்டு கஜானந்த் சர்மா வெளியேறி உள்ளார். அப்போது, அவரது குடும்பத்தினர் அவரைப் பல இடங்களிலும் தேடியுள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு கடந்த மே மாதத்தில் அவர் பாகிஸ்தானில் உள்ள கோட் லக்பத் சிறையில் (Kot Lakhpat jail) அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்திய எல்லையை, கஜானந்த் சர்மா எவ்வாறு கடந்து சென்றார் என்பது இன்றுவரையிலும் தெரியவில்லை.

பாகிஸ்தான் சிறையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் முக்கால்வாசி நாள்களைக் கடந்த நிலையில், கஜானந்த் சர்மாவை விடுதலை செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விஜய் குமார் சிங் தெரிவித்தார். இதையடுத்து, கஜானந்த் சர்மாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். 

இதுகுறித்து கஜானந்த் சர்மாவின் மனைவி கூறுகையில், 'பாகிஸ்தான் சிறையில் பல்வேறு இன்னல்கள் மற்றும் சித்ரவதைகளை அவர் அனுபவித்திருப்பார். தற்போது, அவர் விடுதலையாக உள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆகஸ்ட் மாதத்தில், அவர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர், வீட்டுக்குவந்தவுடன் பெரிய விருந்தை அளிக்கக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்' என்றார் ஆனந்தமாக. 

பாகிஸ்தான் சிறையிலிருந்து வரும் 13-ம் தேதி கஜானந்த் சர்மா விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!