2019-ல் ஒரு நீட் தேர்வுதான்? - மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

2019-ம் ஆண்டில் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கலந்து ஆலோசித்து வருகிறது. 

நீட்

இனி வரும் காலங்களில், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மாதம் 7-ம் தேதி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், `வரும் ஆண்டு முதல் நீட் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து நடத்தாது. நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமை (National Testing Agency) எடுத்து நடத்தும். ஜே.இ.இ மெயின் தேர்வு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நீட் தேர்வு, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடைபெறும்' என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு, நீட் தொடர்பாக மாணவர்களை மேலும், குழப்பமடையச் செய்தது. 'நீட் குறித்து 'மாணவர்களிடம் உரிய விளக்கங்களைத் தமிழக அரசு' வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை கல்வியாளர்கள் அரசிடம் முன்வைத்தனர். 

நீட்

இந்நிலையில், நீட் குறித்து புதிய நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நீட் தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், இரண்டு முறை நீட் தேர்வை நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, வரும் ஆண்டுமுதல் ஆன்லைன் முறையில் கணினி அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் ஆப்லைன் முறையில் தேர்வை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வு குறித்து விரிவான விளக்கத்தை அடுத்த வாரத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!