திருமணம் நடப்பதில் சிக்கல்!- ராஜஸ்தானில் பெயர் மாற்றப்பட்ட கிராமம்!

கிராமத்தில் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முதல்வர் - வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன.  அந்த வகையில், பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டது. ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.

அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வர இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், மத அடிப்படையில் மக்களிடம் பிளவு ஏற்படுத்த முதல்வர் வசுந்தராராஜே முயல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க-வினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாகப் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், ’’இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே முஸ்லிம்கள். ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே எங்களின் வீட்டில் உள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை. அதனால், கடந்த 10  ஆண்டுகளாகவே இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தோம். 

எங்கள் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு சார்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள், இதே பெயரில் வேறு எங்கேனும் ரயில் நிலையம், தபால் அலுவலகம் இருக்கிறதா என சரிபார்த்தார்கள். அதில் எந்தச் சிக்கலும் இல்லாததால், தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது. அதன் பின்னரே, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இனியாவது எங்கள் கிராமத்தினருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம்’’ என்கிறார்கள். 

இது தவிர, மேலும் சில கிராமங்கள் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தோர்கார் மாவட்டத்தின் முகமதுபுரா கிராமத்தின் பெயரை மெடி கா கேடா என்றும் நவாப்புரா கிராமத்தை நயி சர்தால் எனவும் ராம்புரா அஜம்பூர் கிராமத்தை  சீத்தாராம் ஜி கா கேடா எனவும் மாற்றம்செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் இந்தப் பெயர் மாற்ற அரசியலை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!