ஐந்து நாள் உயர்வுக்குப் பின் சரிந்தது நிஃப்டி 10-08-2018

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தக யுத்தம் பெரிய இடையூறாக இருக்கும் என்ற கவலை பெருகி வரும் நிலையில், சர்வதேச சந்தைகளில் இன்று நிலவிய இறுக்கமான மனநிலையைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தலைப்பட்டதால், பங்குகளின் விலைகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 155.14 புள்ளிகள் அதாவது 0.41 சதவிகிதம் சரிந்து 37,869.23 என முடிவுற்றது. கடந்த ஐந்து நாள்கள் தொடர்ந்து லாபத்துடன் முடிந்த தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி, இன்று 41.20 புள்ளிகள் அதாவது 0.36 சதவிகித நஷ்டத்துடன் 11,429.50-ல் முடிந்தது.

இன்று சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணங்கள் :

1. அமெரிக்கா - சீனா வர்த்தகப் பூசல் பெரிதாக உருவெடுத்திருப்பதால் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை.

2. ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு. ஐரோப்பியச் சந்தைகளின் சரிவுக்கு, துருக்கி நாட்டின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் அதன் விளைவாக லிரா மதிப்பிழந்ததும் ஒரு முக்கியக் காரணம்.

3. உலகப் பொருளாதார வளர்ச்சி மங்கக்கூடிய சாத்தியத்தினால் கச்சா எண்ணெய் டிமாண்டு குறைவதற்கான வாய்ப்பு.

4. இந்தியவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏமாற்றமளிக்கும் காலாண்டு நிதி அறிக்கை.

5. டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் 69 எனச் சரிந்தது. பின்னர் சற்று சுதாரித்தாலும், நேற்றைய நிலையை விட சுமார் கால் சதவிகிதம் பின் தங்கியிருப்பது ஒரு காரணம்.

இன்று விலை சரிந்த பங்குகள் :

ஸ்டேட் பேங்க் 3.75%
கெயில் இந்தியா 3.4%
சன் ஃபார்மா 3%
வேதாந்தா 3%
டாடா மோட்டார்ஸ் 2.8%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2.6%
ஹிண்டால்கோ 2.2%
லார்சென் & டூப்ரோ 1.6%
டாடா ஸ்டீல் 1.6%
லூப்பின் 1.5%
கோல் இந்தியா 1.5%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 1.4%
ஜெட் ஏர்வேஸ் 8.4%
ஜெயப்ரகாஷ் அஸோஸியேட்ஸ் 7%
ஜிண்டால் ஸ்டீல் & பவர் 6.2%

விலை அதிகரித்த சில பங்குகள் :

எய்ச்சேர் மோட்டார்ஸ் 5.55%
பாரத் பெட்ரோலியம் 3.1%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.1%
ஹீரோ மோட்டோகார்ப் 1.4%
மஹிந்திரா & மஹிந்திரா 1.3%
AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 8%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1051 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1677 பங்குகள் விலை சரிந்தும், 132 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!