வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (11/08/2018)

கடைசி தொடர்பு:13:50 (11/08/2018)

`18 வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு மழைக்கால கூட்டத்தொடர் நடந்துள்ளது!’ - நாடாளுமன்ற ஆய்வுக்குழு தகவல்

18 வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழைக்காலக் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று மாலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த இந்தக் கூட்டத்தொடரில் பல சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடைபெற்றன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் உரையை முடித்துவிட்டு பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டியணைத்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர மாநில எம்.பி-க்கள் இந்தக் கூட்டத்தொடரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம் மாநிலத் தேசியக் குடியுரிமை தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்தன. இது போன்ற பல நிகழ்வுகளை அடுக்கொக்கொண்டே போகலாம். 

முன்னதாக 2000-மாவது ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற கூட்டத்தொடருக்கு அந்தச் சிறப்பு கிடைத்துள்ளது. இந்த வருட மழைக்கால கூட்டத்தொடரில் 20 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மக்களவைக் கூட்டத்தொடரில் 110 சதவிகிதமும் மாநிலங்களவையில் 66 சதவிகிதமும் அலுவல் நேரத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.