"கண்ணாடி ரகசியம்... பராசக்தி வசனம்!" - கூகுளை உலுக்கிய கருணாநிதி ரசிகர்கள் #GoogleTrends

"வீரன் சாவதேயில்லை, கோழை வாழ்வதேயில்லை" என்று அவர் கூறிய பொன்மொழியைப் போலவே, வீழ்ந்த பின்னும் போராடி, தன் அண்ணாவின் அருகே ஒய்வெடுக்க இடம்பிடித்துவிட்டார் கருணாநிதி.

"வீரன் சாவதேயில்லை

கோழை வாழ்வதேயில்லை" 

- கருணாநிதி

அவர் கூறிய பொன்மொழியைப் போலவே, வீழ்ந்த பின்னும் போராடி, தன் அண்ணாவின் அருகே ஒய்வெடுக்க இடம்பிடித்துவிட்டார் கருணாநிதி. 1930களின் இறுதியில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, இன்று 2018ல் இருக்கும் ஃபேஸ்புக்,ட்விட்டர் வரை கருணாநிதியின் எழுத்துக்கள் நிரம்பிக்கிடக்கின்றன. கையெழுத்துப் பத்திரிகை, மேடைநாடகங்கள் என ஆரம்பித்த அவரின் எழுத்துக்கள் கறுப்பு/வெள்ளை திரைப்படங்கள், கலர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பயணித்து இன்று யூ-ட்யூப் வரை வந்து சேர்ந்திருக்கிறது. 

கருணாநிதி

கடந்த மூன்று நாட்களாக எந்தப் பக்கம் திரும்பினாலும் 'கருணாநிதி' பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள்தாம். செய்திகளாக, அவர் அறிவித்த திட்டங்கள், மாற்றிய தமிழ் வார்த்தைகள், இந்தி எதிர்ப்புப் போரட்டங்கள் என அவரின் சாதனைகள் ஸ்டேட்டஸ்களாக சமூகவலைதளங்களில் அணிவகுத்திருந்தன. புகைப்படங்களாக, அவரின் கறுப்புக் கண்ணாடி, பேனா, மஞ்சள் தூண்டு, கைவிரல் மோதிரங்கள் தொடங்கி அவர் இறுதிகட்டத்தில் பயணித்த சக்கர நாற்காலி வரை வைரலானது. வீடியோக்களில், 'பூம்புகார்' படத்தில் கருணாநிதி தோன்றிப் பேசிய முதல் காட்சி, 'பராசக்தி' வசனங்கள், 'பெரியார்' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எனப் பல வீடியோக்களும் இணையதளங்களை அலங்கரித்தன. இதற்கிடையில், தமிழக அரசு மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது. இதையடுத்து, விஜய், அஜித் என நடிகர்களுக்கு மட்டுமே ஹேஷ்டேக் உருவாக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒருசேர கருணாநிதிக்காக உருவாக்கிய ஹேஷ்டேக்தான் #Marina4kalaignar. இந்தியாவிலிருக்கும் பெரும்புள்ளிகள் தொடங்கி சாமனிய ட்விட்டர் கீச்சர்கள் வரை இந்த ஹேஷ்டேக்கோடு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கோரினர். #RIPKalaignar என்ற ஹேஷ்டேக்கும் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. 

Google Trends

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி, "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது" என்ற தகவல் வெளியானதும், 'கருணாநிதி' என்ற பெயரை 20 லட்சத்திற்கும் மேலானோர் கூகுளில் தேடியுள்ளனர். ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில், 'கருணாநிதி' என்ற பெயர் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள்  ஒவ்வொருவராக காவேரி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். இதையடுத்து, 'கருணாநிதி ஃபேமிலி' என்று 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தேடியுள்ளனர். 'கருணாநிதி மெமோரியல்' , 'கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடி ரகசியம்', 'கருணாநிதி மெரினா', கருணாநிதியின் மூத்த மகனான 'மு.க.முத்து', கருணாநிதின் மகள் 'மு.க.செல்வி' ஆகியோறையும் அதிகமாக தேடியுள்ளனர். 'கருணாநிதி ஃபேமிலி போட்டோ' , 'உதயநிதி மேரேஜ் போட்டோ', 'மு.க.செல்வி ஃபேமிலி' ஆகியவற்றையும் தேடியுள்ளனர். கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற ஆகஸ்ட் 8ம் தேதியன்று, 'மெரினா டு ராஜாஜி ஹால் டிஸ்டென்ஸ்', 'வாலாஜா ரோடு', 'காமராஜர் கிரிமேஷன்', 'காமராஜர் மெரினா' என்றும் தேடப்பட்டுள்ளன. காமராஜர் நினைவிடத்திற்கு மெரினாவில் இடம் தர மறுத்தார் கருணாநிதி என்று சமூக வலைத்தளங்களில் கிளம்பிய புரளிகள்தாம் காமராஜர் பற்றி தேடியதற்கு காரணம். 

இந்த கூகுள் தேடல்களைத் தாண்டி வைரலான ஒரு விஷயம், அன்பழகன் - கருணாநிதி நட்பு. 95 வயதிலும் தன் நண்பனைக் காண காவேரி மருத்துவமனைக்கு வந்த பேராசிரியர் அன்பழகனின் புகைப்படம் கடந்த ஜூலை 29ம் தேதியே மிகப் பெரிய வைரல். அதேபோல கனிமொழியின் மகன் ஆதித்யன் கையை பிடித்துக்கொண்டு தன் நண்பன் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட அன்பழகனின் புகைப்படமும்  சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது. துரைமுருகன், தன் தலைவரை கன்னத்தில் கைவைத்துக் கொஞ்சும் பழைய புகைப்படத்தோடு கருணாநிதி மறைந்தபின் அவர் அழுத புகைப்படத்தை இணைத்து, 'உண்மையான அன்பு' என்பது போன்ற வாக்கியங்களோடு சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ராஜாஜி ஹாலில் தொண்டர்களைப் பார்த்து வணங்கிக்கொண்டே அழத் தொடங்கினார் ஸ்டாலின். சகோதரி மு.க.செல்வி, துரைமுருகன் ஆகியோரை கட்டுகொண்டு அழுத புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டது.   

20ம் நூற்றாண்டைக் கடந்து 21ம் நூற்றாண்டையும் ஆக்கிரமித்துள்ளது கருணாநிதியின் கருத்துகள். இன்னும் பல தொழில்நுட்பங்கள் புதிகாக வந்தாலும் அவர் புகட்டிய சமூக சீர்திருத்தப் பாடங்கள் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இவையணைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான், கருணாநிதி என்பவர் டெக்னாலஜிகளைக் கடந்த தலைவர்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!