முன்னாள் பிரதமர் நேரு குறித்து ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு!

முன்னாள் பிரதமர் நேரு குறித்தும் காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் ராஜஸ்தான் மாநிலப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நேரு குறித்தும் காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் ராஜஸ்தான் மாநிலப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு - பா.ஜ எம்,எல்.ஏ

ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கியான்தேவ் அகுஜா. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பேசுகையில், ’நாட்டில் நிலவும் தீவிரவாதத்தைவிடவும் கொடிய ஆபத்து மிகுந்தது பசுக்களை கொல்வது. அதனால அதைத் தடுக்க கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ எனப் பேசியது சர்ச்சையானது. 

சில மாதங்களுக்கு முன்பு, இந்து பெண்களை குறிவைத்து சிலர் காதல் செய்து மதமாற்றம் செய்வதாகப் பேசி பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார். டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி விமர்சனத்துக்கு உள்ளானார். அத்துடன், ராகுல்காந்தி கோயில்களுக்குச் செல்வது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தது பிரச்னையானது. இந்த நிலையில், முன்னாள் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு குறித்து தற்போது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார். 

நேரு குடும்பம் பற்றியும் காங்கிரஸ் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்துவரும் அவர் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார். ``நேருவை எல்லோரும் பண்டிட் எனச் சொல்கிறார்கள். அதை அவரது பெயருக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சேர்த்துக்கொண்டுவிட்டது. ஆனால், அவர் உண்மையான பண்டிட் கிடையாது. நிஜமான பண்டிட் யாருமே மாடு, பன்றி இறைச்சிகளை உட்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர் நிஜ பண்டிட் கிடையாது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும் அந்தக் கட்சிக்கு உண்மையான கொள்கை எதுவும் கிடையாது. பொதுமக்களிடம் சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன்மூலமாகத் தேர்தலில் வாக்குகளைக் கைப்பற்றுவதையே காங்கிரஸ் கட்சி வழக்கமாகக் கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!