`வரவேற்புப் பேனர்களுக்கிடையில் #GoBackBJP ஃப்ளெக்ஸ்!’ - அமித் ஷாவைக் கடுப்பேற்றிய திரிணாமுல் காங்கிரஸ் | GoBackAmitShah goes trending on Twitter, ahead of his kolkatta visit

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (11/08/2018)

கடைசி தொடர்பு:17:14 (11/08/2018)

`வரவேற்புப் பேனர்களுக்கிடையில் #GoBackBJP ஃப்ளெக்ஸ்!’ - அமித் ஷாவைக் கடுப்பேற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் #GoBackAmitshah முழக்கங்களை எழுப்பினர். 

சமீபத்தில் மோடி மற்றும் அமித் ஷா தமிழகம் வந்தபோது #GoBackModi, #GoBackAmitshah போன்ற கோஷங்கள் ட்ரெண்ட் ஆனது. தற்போது இதே கோஷங்கள் இன்று மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனால், இந்த முறை ட்ரெண்ட் ஆகியிருப்பது தமிழகத்தில் அல்ல மேற்குவங்கத்தில். தமிழகத்தைப் போன்று மேற்குவங்கத்திலும் காலூன்ற பா.ஜ.க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜிக்கு எதிராகத் தொடர் குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க கூறி வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தை மோதல் நாளுக்கு நாள் முற்றிவருகிறது. இதேபோல், அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்திலும் இக்கட்சிகள் இடையே தொடர் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இந்தப் பதிவேடு விவகாரத்தில் நாட்டில் ரத்த ஆறு ஓடும் வகையில் பா.ஜ.க செயல்படுவதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா சென்றார். அங்கு பேசிய அவர், ``தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தை மம்தா திசை திருப்புகிறார். மம்தாவுக்கு மட்டுமே நாங்கள் எதிரி, வங்க மொழி பேசும் மக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை" எனப் பேசினார். முன்னதாக அமித் ஷாவின் மேற்குவங்க வருகையை எதிர்க்கும் விதமாகத் தமிழகத்தில் செய்ததுபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் #GoBackModi, #GoBackAmitshah, #GoBackBJP முழக்கங்களை ட்ரெண்ட் ஆக்கினர்.

Photo Credit: ANI

அதற்கு மேலும் ஒருபடியாய், அமித் ஷாவை வரவேற்கும் பேனர்களுக்கு நடுவில் #GoBackBJP பேனர்களை வைத்தனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஆங்காங்கே கறுப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close