வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (11/08/2018)

கடைசி தொடர்பு:18:00 (11/08/2018)

இடுக்கி அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்தது!

இடுக்கி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,400.72 அடியாக உள்ளது. 

இடுக்கி

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால், இடுக்கி அணை உட்பட 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் பரிவூர், ஆலுவா, கனாயன்னூர் மற்றும் எர்ணாகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 78 முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். முன்னதாக, அடுத்த 48 மணி நேரத்துக்கு கேரளாவில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இடுக்கி

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2,403 அடி ஆகும். தொடர்ந்து பெய்த கன மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. இதனால், முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. கடந்த 2 நாள்களை ஒப்பிடுகையில் குறைவான அளவே நேற்று மழை பெய்திருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் சற்று குறைந்திருக்கிறது.இன்று (11.08.2018) மதியம் 12 மணியளவில் அணையின் நீர்மட்டம் 2,400.80 அடியாக இருந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 2,400.72 அடியாக உள்ளது. இருப்பினும், இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 14-ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ளது. 

`இடுக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில் அளவு குறைந்துள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் இடுக்கி பகுதிகளில் மிகுதியான வெள்ளம் ஏற்படுவதற்காக வாய்ப்பு தற்போது இல்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார்.