மருத்துவப் படிப்புக்கு கருணை மதிப்பெண் வழங்குவது அபத்தமானது! - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மருத்துவப் படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை மதிப்பெண்கள் வழங்குவதை ரத்து செய்து விதிகளில் திருத்தம் கொண்டு வர அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கருணை மதிப்பெண்ணை உரிமையாகக் கோர முடியாது என்றும், அதுகுறித்து பல்கலைக்கழகம் முடிவு செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், மருத்துவப் படிப்பில் கருணை மதிப்பெண் வழங்குவது அபத்தமானது எனக் கருத்து தெரிவித்த நீதிபதி, கருணை மதிப்பெண் வழங்குவதை ரத்து செய்து விதிகளில் திருத்தம் கொண்டு வர வண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, உண்மையான மருத்துவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியாமல் மக்கள் திகைத்து நிற்கும் நாள் வரும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கருணை மதிப்பெண் பெற்று மருத்துவர்களானவர்களிடம் சிகிச்சை பெற்று தன் உயிரை பணயம் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றார். மேலும், நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக, மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடுவது அநீதியானது எனவும் நீதிபதி வைத்தியநாதன் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!