50 ஆண்டுகள் இல்லாத கனமழையால் பேரழிவு - நிவாரணப் பணிகளுக்கு பங்களிக்க பினராயி விஜயன் கோரிக்கை!

கனமழை நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கனமழை

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழைக்கு இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத மழைப்பொழிவை கேரளா சந்தித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 27 முக்கிய அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால், அவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதை அடுத்து, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களும் உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளன. இதற்கிடையே இன்று வெள்ளப் பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடுக்கி மாவட்டத்துக்கு முதலில் சென்ற பினராயி விஜயன், அங்கிருக்கும் கட்டப்பனை என்ற இடத்துக்குச் சென்றார். வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட பின் கார் மூலமாக மாவட்டத்தின் ஏனையச் பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டார். ஆனால், பல இடங்களில் தொடர் மழை மற்றும் வெள்ள நீரால் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் அவரால் காரில் செல்ல முடியவில்லை.

பினராயி விஜயன்

இதையடுத்து, ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார். முன்னதாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும் வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரண உதவி அளிக்கப்படும் என பினராயின் விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``கேரளா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மழை அழிவை எதிர்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது கடினமான பணியாக இருக்கும். இதனால் நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாகப் பங்களிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!