எதிர்க்கட்சித் தலைவருடன் மழை பாதிப்புகளைப் பார்வையிடும் கேரள முதல்வர்! - குவியும் பாராட்டுகள்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 

பினராயி - ரமேஷ் சென்னிதாலா

50 ஆண்டுகள் இல்லாத கனமழையைக் கேரளா எதிர்கொண்டுள்ளது. இதனால் கேரளத்தின் அநேகப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வட கேரளம், தென் கேரளம் பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் வெகுவாகச் சேதமடைந்துள்ளன. இந்த மழையால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளாவின் முக்கிய அணையான இடுக்கி முழுகொள்ளவை எட்டியதுடன், ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் கேரள மாநிலத்தின் மற்ற அணைகளும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருபுறம் இது மகிழ்ச்சி என்றாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை கேரளா எதிர்கொண்டுள்ளது. இதுவரை 30 பேருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமடைந்தாலும், தொடர் நிலச்சரிவு, கனமழையால் அப்பணிகளில் லேசான சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே, இன்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக இடுக்கி மாவட்டத்துக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்றார். மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஐ.ஜி, அதிகாரிகளுடன் புறப்பட்ட பினராயி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும் உடன் அழைத்துச் சென்றார். இவர்கள் இருவரும் ஹெலிகாப்டர் மற்றும் கார் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டனர்.

பினராயி - ரமேஷ் சென்னிதாலா

தொடர்ந்து இருவரும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கவும் உதவி செய்தனர். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். ஒரு முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகச் செல்வது கேரள மக்களுக்குப் பழகியதுதான் என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த இணையதளவாசிகள் இவர்களின் நடவடிக்கையை வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, ஜெயலலிதா மறைவின்போதும், கருணாநிதி மறைவின்போதும் பினராயி, சென்னிதாலா, ஆளுநர் சதாசிவம் ஆகியோர் ஒன்றாக வந்ததும் பெரிதாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!