வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை? - மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு 

24 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் ராஜென் கோஹைன் சிக்கியுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராஜென் கோஹைன்

மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சராக உள்ளவர் ராஜென் கோஹைன். அசாம் மாநிலத்தின் நவ்கோங் மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ரயில்வேத் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, இவர் மீது சமீபத்தில் நாகௌன் சதார் காவல்நிலையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. அவர் மீது திருமணமான 24 வயதான பெண் ஒருவர் காவல்நிலையத்தில் கடந்த 2ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில்,``8 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் கணவர் மற்றும் வீட்டு உறுப்பினர்கள் இல்லாதபோது, கோஹைன் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் அவர் மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பெண்ணின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார் கோஹைன். 

மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகக் கூறினார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நாகௌன் சதார் போலீஸார், மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீஸார், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டப்படி தொடர்ந்து இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எனினும் புகார் அளித்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு சம்மதிக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அசாம் பா.ஜ.கவுக்கு மட்டுமில்லாமல் மத்திய அரசுக்கும் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!