`எங்கள் ஆட்சியில் 540 கோடி; மோடி ஆட்சியில் 1600 கோடி' - ராஜஸ்தானில் கொந்தளித்த ராகுல் காந்தி! 

நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கப் பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட ஒதுக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில் நடந்து மக்களவை தொடரில் நீண்ட நேரம் பேசிய போதும் ரஃபேல் ஊழலைப் பிரதானமாக குறிப்பிட்டு இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனக் கடுமையாக சாடினார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல். அதன்படி, ஜெய்ப்பூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியைக் கடுமையாக சாடினார். அதில், ``இரண்டுகோடி வேலைவாய்ப்புக்கள், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், பெண்கள் பாதுகாப்புக்கு உறுதி எனக் கடந்த தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசியது. 

ஆனால் இதில் ஒன்றைக் கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை. இவை அனைத்தும் தற்போது வெற்று வாக்குறுதிகள் ஆகிவிட்டன. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய விடுத்த கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொழிலதிபர்களுக்கு இரண்டு லட்சம் கோடி வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு ரஃபேல் விமானத்தை ரூ.540 கோடிக்கு வாங்கினோம். மோடி அரசோ ஒரு ரஃபேல் விமானத்தை ரூ.1600 கோடி கொடுத்து வாங்குகிறது. இது குறித்து மக்களவை உட்பட அனைத்து இடங்களிலும் கேள்வி எழுப்பிவிட்டேன். ஆனால் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். தொடர்ந்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!