வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (12/08/2018)

கடைசி தொடர்பு:08:03 (12/08/2018)

கேரளத்தில் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சேதங்களை பார்வையிட வருகிறார் ராஜ்நாத் சிங்!

கேரள மாநிலத்தில் மழைச்சேதம் காரணமாக 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கனமழை

கேரள மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக கேரள மாநிலத்தில் அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் அதிஜாக்கிரதை என்னும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இரவு நேரங்களில் யாரும் வெளியே செல்லவேண்டாம் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது. இடுக்கி அணைக்குத் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கிழமை வரை தண்ணீர் வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இடைமலையாறு அணையின் மூன்று ஷட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பம்பா அணையில் 2 ஷட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் வயநாட்டில் அதிகப்படியான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மழையால் வீடு இடிந்தவர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என மொத்தம் 60,622 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மதியம் கேரளா வருகிறார். கொச்சி விமானநிலையத்திற்கு வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மழைபாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார்.