வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (12/08/2018)

கடைசி தொடர்பு:13:22 (17/08/2018)

தமிழகத்தின் உரிமையை உணர்த்திய கேரள மழை –முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகளின் பேச்சு

கடந்த ஆகஸ்ட் 8 -ம் தேதியில் இருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளமென காட்சியளிக்கிறது.  இடுக்கி அணை உட்பட 22 அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை தாண்டவில்லை. இதற்கான காரணத்தை முன் வைத்து பேசுகிறார்கள் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள். “கேரளாவில் பேய் மழை பெய்கிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணை நிரம்பி, ஏற்கனவே நிரம்பி வழியும் இடுக்கி அணையை பாதித்துவிடும் என்று பேசுகிறார்கள். அப்படி பாதிக்க வேண்டும் என்றால் மழை ஆரம்பித்த மூன்றாவது நாளே பாதித்திருக்கும். 26 ஆண்டுகளாக நிரம்பாத இடுக்கி அணை நிரம்பி இருக்கும் போது அதனை விட சிறிய முல்லைப்பெரியாறு அணை நிரம்பியிருக்க வேண்டும் தானே? இதற்கு இயற்கையும், அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் மட்டுமே காரணம்.

முல்லைப்பெரியாறு அணை

தென் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தையும், வறட்சியையும் கண்டு மனம் வருந்தி, இம்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி ஜான் பென்னிகுவிக் கட்டியது தான் முல்லைப்பெரியாறு அணை. இயற்கையாகவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை நீரானது, மேற்குத்தொடர்ச்சி மலையின் எதிர்புறம் கீழிறங்கி  தமிழகத்திற்கு பயனில்லாமல் போகிறது என்று அறிந்து, அணைக்கான இடத்தை தேர்வு செய்து முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். ஆனால், முல்லைப்பெரியாறு அணை எங்களுக்கு தான் சொந்தம் என கேரளா உரிமை கொண்டாடுகிறது. இதற்கு எந்த தகுதியும் அவர்களுக்கு இல்லை. ஜான் பென்னிகுவிக் உயிரோடு இருந்திருந்தால், இயற்கையாகவே, கேரளாவிற்கும் முல்லைப்பெரியாறு அணைக்கும் சம்மந்தம் இல்லை எனவும், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் தமிழக நில அமைப்பைச் சேர்ந்தவை எனவும் கூறியிருப்பார்” என்கின்றனர் அழுத்தமாக. மேலும் முல்லைப்பெரியாறு அணை நில அமைப்பின் படி தமிழகத்திற்கு சொந்தம் என இந்த மழை உணர்த்தியிருப்பதாக கூறுகின்றனர் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள்.