வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (12/08/2018)

கடைசி தொடர்பு:18:10 (12/08/2018)

`நிலச்சரிவிலிருந்து குடும்பத்தை மீட்ட நாய்' - கேரளாவில் நெகிழ்ச்சியான சம்பவம்!

கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்படவிருந்த குடும்பத்தை நாய் ஒன்று முன்னெச்சரிக்கையாக காப்பாற்றிய சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாய்

PC : SnehaMKoshy

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த மழைகாரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த இயற்கை பேரிடர் காரணமாக இதுவரை 37-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழி என்ற கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார் மோகனன். இவர் தன் குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி இருக்கும். அப்போது அவர்களது வீட்டு நாய் குரைத்துள்ளது. வழக்கமாக நாய் குரைக்கிறது என்று எண்ணி மீண்டும் பழையபடி உறங்கச் சென்றுவிட்டார் மோகனன். சிறிது நேரம் கழித்து மீண்டும் நாய் குரைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நாய் குரைத்ததை கேட்ட மோகனன், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.

தன் வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது மனைவி,குழந்தை மற்றும் நாயுடன் அங்கிருந்து வெளியேறினார். ஆனால் மாடியிலிருந்த அவரது தாத்தா, பாட்டியை காப்பாற்ற முடியாமல் போனது தான் சோகம். இது பற்றி அவர் கூறுகையில் "என் வீடு பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில் இருக்கிறது.  எங்களை அதிகாரிகள் வெளியேற கூறியதால், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தோம். அப்படி இங்கேவந்தும்  நிலச்சரிவு ஏற்பட்டு விட்டது. இதில் என் தாத்தா, பாட்டியை இழந்துவிட்டேன்'' என கண்ணீர் மல்க கூறினார்.