வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (12/08/2018)

கேரளாவுக்கு ரூ.100 கோடி உடனடி நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு!

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மலைப்பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 37-பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த இயற்கை பேரிடரால் இடுக்கி மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள இடுக்கி அணையால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

பினராயி

இதன்காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்து ராஜ்நாத் சிங்குக்கு விளக்கப்பட்டது.  இதையடுத்து கேரளாவுக்கு ரூபாய் 100 கோடி நிவாரண நிதி வழக்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். வெள்ள மீட்பு நிவாரண பணிகளுக்கு தேவைப்பட்டால் தேசிய பேரிடர் நிவாரண படைகளை அனுப்ப தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.