பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை மசோதா - ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர்!

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத்தலைவர்


சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இதற்கு முடிவுகட்டும் வகையில், `குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா 2018' கொண்டு வரப்படுகிறது. இந்த சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த 30-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இந்த மசோதா குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பாலியல்

அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை  செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர்களுக்கான  சிறைதண்டனை 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு சரத்துக்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!