வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (13/08/2018)

கடைசி தொடர்பு:07:41 (13/08/2018)

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு - ஹைதராபாத் இளைஞர்கள் இருவர் கைது! 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் உடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு பேரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

கைது

இந்தியாவில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் 3 பேர், 2016-ம் ஆண்டில் கைதாகினர். இதில், இரண்டு பேர் மீதான குற்றங்கள் உறுதியானதால், அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது நபரான அட்னான் ஹசன் என்பவர் மீதான விசாரணை மட்டும் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்துவந்தது. 

இந்நிலையில், ஹசனிடம் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் இருவர்குறித்த தகவல்கள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல்லா, அப்துல் காதிர் ஆகிய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் இருவரும் ஐ.எஸ் அமைப்பு உடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. மேலும், இந்த அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சமீபத்தில், ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதப் பொருள்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இருந்த மேலும் இரண்டு பேர் கைதாகி உள்ளதால், அவர்களிடம் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.