உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மாற்றப்பட்ட விமானக் கண்காட்சி - அதிர்ச்சியில் குமாரசாமி | Kumaraswamy expressed his displeasure after the 'Aero India' show shifted from Bengaluru to Uttar Pradesh this year

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (13/08/2018)

கடைசி தொடர்பு:08:40 (13/08/2018)

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மாற்றப்பட்ட விமானக் கண்காட்சி - அதிர்ச்சியில் குமாரசாமி

இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த விமானக் கண்காட்சி, உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால், கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சியடைந்துள்ளார். 

குமாரசாமி

1996-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்திய பாதுகாப்புப் படையால் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டது முதல் கடந்த வருடம் வரை பெங்களூருவில் உள்ள விமான படைத்தளத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற உள்ள 22-வது ஏரோ இந்தியா கண்காட்சி, முதல் முறையாக பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் ஆளும் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி. “பா.ஜ.க நண்பர்கள் இதற்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். நாங்களும் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளோம். விமானக் கண்காட்சி நடத்த பெங்களூருதான் சிறந்த இடம். அதற்கான அனைத்து வசதிகளும் இங்குதான் உள்ளன. ஆனால், பாதுகாப்புத்துறை ஏன் இது போன்ற முடிவை எடுத்தது எனத் தெரியவில்லை” எனச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வரா, “சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு மையம் நம்மிடம்தான் இருந்துவருகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பிறகு, நாம் தொடர்ந்து முக்கிய பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பல முக்கிய திட்டங்களை இழந்துவருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்த வருடம் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சி, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.