வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (13/08/2018)

கடைசி தொடர்பு:11:40 (13/08/2018)

அடுத்த ஆண்டில் 22 செயற்கைக்கோள்கள்..! - இஸ்ரோ அதிரடி

அடுத்த  ஆண்டில் மட்டும் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இருப்பதாக, இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரோ சிவன்

 இந்தியா, நிலவை ஆராய்ச்சிசெய்ய சந்திராயன்-1 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி ஆய்வுநடத்திவருகிறது. அதைத் தொடர்ந்து, சந்திராயன்-2 என்ற விண்கலத்தையும் செலுத்தி ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சந்திராயன்-1 விண்கலத்தை நிலவின் வெளிவட்டப்பாதையில் நிறுத்தி, ரோவர் மட்டும் நிலவில் இறக்கி ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இந்தமுறை, சந்திராயன்-2 விண்கலத்தையே நிலவில் இறக்கி ஆய்வுசெய்ய இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. 

இதுகுறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், “ அடுத்த  ஆண்டு மட்டும் 22 விண்கலங்களைச் செலுத்த உள்ளோம். அடுத்த மூன்று  ஆண்டுகளில், 45 விண்கலங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். வரும் ஜனவரி 3-ம் தேதி, சந்திராயன்-2 விண்கலத்தைச் செலுத்த முடிவுசெய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன் பணிகள் முழுமையாக நிறைவடையாத பட்சத்தில் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தும் பணி, மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.