''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி!'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி

கேரள மாநிலம், மழை வெள்ளத்தில் சிக்கித் திண்டாடிவருகிறது. பெரு மழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள் உடைந்துபோய் காணப்படுகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் திண்டாடிவருகின்றனர். நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைக்குழுவினர், ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

பிளாங்கட்  வழங்கிய வியாபாரி விஷ்ணு

நடிகர்களும் பொதுமக்களும் கேரளாவுக்கு நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்த வகையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்தான் விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகளைத் தானமாக வழங்கியது, சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. ஊரெங்கும் வெள்ளக்காடாக மாறி மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்ட விஷ்ணு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முடிவெடுத்தார். அவரிடம், ஹரியானாவில் உள்ள பானிபட்டிலிருந்து விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகள் மட்டுமே இருந்தன. தன்னிடம் இருந்த அத்தனை பிளாங்கெட்டுகளையும் கண்ணூர் மாவட்ட ஆட்சியரிடம் தானமாக வழங்கினார். 

'நான் 16 வயதில் கேரளாவுக்கு வந்தேன். கண்ணூரில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறேன். வெறுங்கையுடன் கேரளாவுக்கு வந்த எனக்கு, இங்கே எல்லாம் கிடைத்தது. கேரள மாநிலம் எனது இரண்டாவது தாய் வீடு. தாய் வீடு கஷ்டப்படும்போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. என்னை வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி '' என்று விஷ்ணு நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!