பசு பாதுகாப்புக்கு கட்சி துணைநிற்கவில்லை! - பா.ஜ.க-விலிருந்து மூன்றாவது முறையாக வெளியேறிய எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

'பசு வதைக்கு எதிரான எனது போராட்டத்துக்கு கட்சியிலிருந்து ஆதரவு கிடைக்காததால், நான் பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டேன்' என்று தெலங்கானா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ., டி.ராஜா சிங் லோத். பா.ஜ.க-வைச் சேர்ந்த அவர், கோஷாமஹால் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அவர், நேற்றிரவு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'எனக்கு இந்து தர்மமும், பசு பாதுகாப்பும்தான் முக்கியம். அரசியல் இரண்டாவது பட்சம்தான். பசு பாதுகாப்பு காரணத்துக்காக பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டேன். அதற்கான கடிதத்தை, மாநிலத் தலைவர் லஷ்மணனுக்கு அளித்துவிட்டேன். பசு பாதுகாப்பு விவகாரத்தை சட்டமன்றத்தில் நான் பல முறை எடுத்துவைத்தேன்.

ஆனால், கட்சி எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை. நானும் எனது பசு பாதுகாவல் அணியும் சேர்ந்து தெருக்களில் இறங்கிப் போராடுவோம். மாநிலத்தில், பசு இறைச்சிக் கடைகளை இல்லாமல் செய்வோம். பசு பாதுகாப்புக்காகக் கொலையும் செய்வோம் அல்லது கொலை செய்யப்படுவோம். இறைச்சிக்காக பசு மாடுகள் பயன்படுத்தக் கூடாது என்பதே எங்களுடைய லட்சியம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக காவல் துறையினர் பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றுமுறை கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!