இடுக்கி அணை நீர்த் திறப்பு மனிதத் தவறா..? சர்ச்சையும் கேரள மின்வாரியத்தின் பதிலும் | People are against kerala electricity board

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (13/08/2018)

கடைசி தொடர்பு:15:02 (13/08/2018)

இடுக்கி அணை நீர்த் திறப்பு மனிதத் தவறா..? சர்ச்சையும் கேரள மின்வாரியத்தின் பதிலும்

தமிழ்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. அந்த ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதில், ஏனோதானோ என்று அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையாண்டதால் சென்னை மாநகரம் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கித் தத்தளித்தது.

இடுக்கி அணை நீர்த் திறப்பு மனிதத் தவறா..? சர்ச்சையும் கேரள மின்வாரியத்தின் பதிலும்

மிழ்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. அந்த ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதில், ஏனோதானோ என்று அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையாண்டதால் சென்னை மாநகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தது. தற்போது கேரளாவிலும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையைக் கையாண்ட விஷயத்தில் அம்மாநில மின்சாரவாரிய அதிகாரிகள் பொறுப்பில்லாமல் செயல்பட்டு, இத்தகைய நிலையை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் திக்குமுக்காட வேண்டிய சூழலில் வெள்ளநீர்ப் பெருக்கால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் கடந்த மாதம் முதற்கொண்டே தென்மேற்குப் பருவமழை அதிகளவில் பெய்துவருகிறது. ஜூன் மாதத்தில் பெய்த மழையில் மின்சாரம் தாக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தச் சமயத்தில் இடுக்கி அணை முழுக் கொள்ளவை எட்டும்நிலை இருந்தது. அப்போது தண்ணீரை வெளியேற்ற சிறுதோணி அணையின் ஒரு ஷட்டர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதியில் மழை குறைந்ததைத் தொடர்ந்து இனி பிரச்னை இருக்காது என நம்பினார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் இடுக்கி அணையின் ஐந்து ஷட்டர்களையும் திறந்து ஒட்டுமொத்த தண்ணீரையும் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரே, பேரழிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

கேரளா

``நீர் மின் திட்டத்துக்காகக் கட்டப்பட்டு இன்றளவும் கேரள மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இடுக்கி அணை. வளைவாக கட்டப்பட்ட அணைகளில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அணை இது. செறுதோணி மற்றும் குளமாவு ஆகிய அணைகளைச் சேர்த்து கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 2403 அடி. இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில், கடந்த மாதமே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பம் முதலே அணையை இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, தொடர்ந்து கவனித்துவந்தார். அணையால் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடும் என முன்பே யூகித்த அமைச்சர் எம்.எம்.மணி, 2396 அடி கொள்ளளவை எட்டியதும் அணையைத் திறக்க வேண்டும் என மின்சார வாரிய உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் `2401 அடிக்கும் 2402 அடிக்கும் இடையில் தண்ணீர் திறந்த வரலாறு உண்டு. அணைக்கு வரும் தண்ணீரின் அளவைவிட மின்சாரம் தயாரிப்பதற்காக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் 2,398 அடி கொள்ளளவை எட்டியதும் அணையைத் திறக்கலாம்' என்று கூறி அமைச்சரின் வாயை அடைத்திருக்கிறார்கள். வேறுவழியின்றி அமைச்சரும் சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமைச்சர் கூறிய கருத்தின் தீவிரத்தை அதிகாரிகள் அப்போதே உணர்ந்திருந்தால் ஆகஸ்ட் 1-ம் தேதி 2,396 அடி கொள்ளளவை எட்டியபோதே, ஒரு ஷட்டர் மட்டும் திறந்து தண்ணீரை சிறிது சிறிதாக வெளியேற்றியிருக்கலாம். ஆனால் நான்கு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு பெய்த பெருமழையால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 9-ம் தேதி ஒரு ஷட்டர் திறக்கப்பட்டது. தண்ணீர் வரத்தைச் சமாளிக்க முடியாத நிலையில் வரலாற்றில் முதல்முறையாக அணையின் ஐந்து ஷட்டர்களையும் மொத்தமாகத் திறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மின்சார வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் அழிவு அதிகரித்தது" என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் அமைச்சர் எம்.எம்.மணியின் ஆதரவாளர்கள்.

அதேநேரம் அதிகாரிகளுக்கு ஆதரவாகவும் எதிர்வாதம் வைக்கப்படுகிறது. ``இடுக்கி அணைக்கட்டில் நிரம்பியிருப்பதைத் தண்ணீராக மட்டும் பார்க்கவில்லை. இந்த தேசத்துக்கான மின்சாரம் என அதிகாரிகள் கருதினார்கள். இடுக்கி அணையிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட வீணாக்காமல் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதே மின்சார வாரிய அதிகாரிகளின் குறிக்கோள். கடந்த 9-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு அணை திறக்கப்பட்டது. 10-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு 5 ஷட்டர்களும் திறக்கப்பட்டன. சனிக்கிழமை காலையில் எடுக்கப்பட்ட கணக்குப்படி அணையிலிருந்து 52.652 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி 7.67 கோடி யூனிட் மின்சாரம் தயாரித்திருக்கலாம். சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 4 ரூபாய் என நிர்ணயித்தாலும் 30.68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 44 மணிநேர கணக்குப்படி, இவ்வளவு தொகை என்றால் ஷட்டரை மூடிய பிறகு கணக்கிட்டால் இழந்த தொகை இன்னும் அதிகரிக்கும். மழை குறைந்து அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்ததால் நிலைமையைச் சமாளித்துவிடலாம் என அதிகாரிகள் நினைத்தார்கள். திடீர் பிரளயத்தை ஏற்படுத்திய மழையை யாராலும் தடுக்க முடியாது. எனவே, அதிகாரிகள் மீது பழிபோட வேண்டாம்" என்கிறார்கள் வேறு சிலர்.

idukki

இடுக்கி அணை குறித்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, `வயநாடு பாணாசுர சாகர் அணையை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டார்கள்' என்ற அடுத்த சர்ச்சையில் மின்சார வாரிய அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி மானந்தவாடி எம்.எல்.ஏ., எம்.கே.கேளு, ``ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட இரண்டாவது பெரிய அணையான பாணாசுர சாகர் அணை, மின்சாரம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என எந்த முன்னறிவிப்புகளும் இல்லாமல் நடு இரவில் இந்த அணையைத் திறந்து விட்டிருக்கிறார்கள். இடுக்கி அணைக்குக் கொடுத்த முக்கியத்துவம் இந்த அணைக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போதைய பாதிப்புக்களுக்கு மத்தியில் இதைப் பெரிய பிரச்னை ஆக்காமல் அமைதியாக இருக்கிறேன்" என்றார். 

`அணை திறக்கும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் அணை ஏற்கெனவே மூடப்பட்டதும், திறக்கப்பட்டதையும் மின்சார வாரியம் முறையாக கலெக்டருக்குத் தெரிவிக்கவில்லை' என வயநாடு ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்த அணை திறக்கப்பட்டதால் பனமரம், படிஞாறத்தற ஆகிய பஞ்சாயத்துகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டு தாலுகாக்களில் 59 முகாம்கள் திறக்கப்பட்டு கூடுதலாக 16,000 பேரை தங்கவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இரண்டு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் 'தங்களுக்கு மின்சார வாரியம் இழப்பீடு வழங்கவேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர். கனத்த மழைக்கிடையே கேரள மின்சாரவாரியத்துக்கு எதிரான குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒகி புயல், நிப்பா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் கேரளத்தில் ``பிரளயக் கெடுதியை" ஏற்படுத்தியிருக்கிறது கனமழை.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close