`மீண்டு வா கடவுளின் தேசமே..!’- கேரளாவுக்காகப் பிரார்த்திக்கும் இந்தியா #KeralaFloods

கேரளாவில் பருவ மழை அதி தீவிரமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. கேரளாவில் கடந்த 94 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

கேரளா மழை


தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக கேரளாவை வெள்ளத்தில் மிதக்கச் செய்துள்ளது. இந்தக் கனமழையால் அதிகம் பாதிப்புக்குள்ளானது இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்டப் பகுதிகள்தான். கேரளாவின் 14 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்டவற்றில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. 

மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், `மாநிலத்தில் கனமழையால் 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 10,000 கி.மீ அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மொத்த சேதத்தின் மதிப்பு ரூ.8,316 கோடியாகும். இது வரலாறு காணாத பேரழிவு. கடந்த 1924-ம் ஆண்டு இதுபோன்று ஒரு இயற்கைப் பேரிடர் இங்கு ஏற்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் பெரும் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

கேரளா மழை

நேற்று (12.08.2018) கேரளாவில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பினராயி விஜயனுடன் விமானம் மூலமாக சென்று பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் நிலை மோசமாக உள்ளதாக வருத்தம் தெரிவித்த ராஜ்நாத் சிங் ‘மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக  ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யும்’ என்று அறிவித்தார்.

கேரளா மழை
 

இதனிடையே தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். `வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு முதலமைச்சரின் நேரடி நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்கலாம்’ என்று பினராயி விஜயன் இந்திய மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

நீரால் சூழப்பட்ட கேரளாவின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்படுத்திய தாக்கத்தால், நெட்டிசன்ஸ் பலர் #SaveKerala , #staystrong ,  #StaySafe , #KeralaFloodRelief, #GodSaveYourOwn Country, கடவுளே உங்கள் தேசத்தைக் காப்பாற்றும், மீண்டு வா கேரளா போன்ற ஹேஷ்டாக்கின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். பலர் தங்களால் முடிந்த நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர். 

தற்போதைய நிலவரம்..
கேரளாவில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், கன மழை சற்று குறைந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!