வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (13/08/2018)

கடைசி தொடர்பு:15:35 (13/08/2018)

`இவரை விடப் பெரிய தேசப் பக்தர் யாரும் இல்லை’ - யாரைச் சொல்கிறார் பாபா ராம்தேவ்

‘பிரதமர் மோடியைவிடப் பெரிய தேசப் பக்தர், பசு பக்தர் வேறு யாரும் இருக்கமுடியாது’ என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

பாபா ராம்தேவ்

பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் நேற்று பசு பாதுகாவலர்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசும்போது, ``போலீஸார் தங்களின் வேலையைச் சரிவர செய்வதில்லை. அதனால்தான் பசுக் காவலர்கள் வெளியே வந்து அந்த வேலையைச் செய்துவருகின்றனர். பசுக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில பசுக் காவலர்கள் மட்டுமே தவறான வழியில் செல்கின்றனர். ஆனால், 90 சதவிகித பசுக் காவலர்கள் முற்றிலும் உண்மையாகவே நடந்துகொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் மாடுகள் கொல்லப்படுவதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, ``பிரதமர் நரேந்திர மோடியைவிட மிகப்பெரிய தேசப் பக்தர் மற்றும் பசு பக்தர் வேறு யாரும் இந்த நாட்டில் இருக்க முடியாது. மாடுகள் கொல்லப்படுவதை எதிர்த்து அவர் நிச்சயம் சட்டம் நிறைவேற்றுவார். யாரும் பசுக் கடத்தல் தொடர்பாகப் பேசுவதில்லை. பசுக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஏன் ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. இனி இது நடக்கக்கூடாது” எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து அசாம் குடியுரிமைப் பதிவு தொடர்பான கேள்விக்கு, ``வங்கதேசத்தவர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் எனச் சட்டவிரோதமாக வரும் யாரும் இங்கு இருக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.