நிவாரண முகாமில் இருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த எம்.எல்.ஏ.! | MLA celebrated birthday in the flood relief camp

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/08/2018)

கடைசி தொடர்பு:16:20 (13/08/2018)

நிவாரண முகாமில் இருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த எம்.எல்.ஏ.!

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியிலிருந்து கேரளாவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நிவாரண முகாமில்,  சிறுமி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் தற்போதைய கவனம் பெற்றிருக்கிறது.

இடுக்கி அணையிலிருந்து வெளியேறிய தண்ணீர், சிறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் 9 குடும்பங்கள் மீட்கப்பட்டு காந்திநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள ராஜீவ் − மினி தம்பதியின் மகளான சிறுமி ஏஞ்சலுக்கு இன்று பிறந்தநாள். மாற்றுஉடை கூட இல்லாத சூழலில் பிறந்தநாள் கொண்டாட முடியாமல் வருத்தத்தில் இருந்துள்ளார் சிறுமி ஏஞ்சல். இந்த விஷயம் இடுக்கி எம்.எல்.ஏ ரோசி அகஸ்டினுக்குத் தெரியவர, சிறிய கேக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக நிவார முகாமுக்கு விரைந்தார்.

இதைக் கண்ட சிறுமி ஏஞ்சலுக்கு அவ்வளவு சந்தோஷம். மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். இது குறித்து எம்.எல்.ஏ ரோசி அகஸ்டின் பேசும்போது, ``எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடியது மன நிறைவாக இருந்தது. இதன் மூலம் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் மன வலிமையோடு இருப்பார்கள். விரைவில் மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கும்" என்றார். எம்.எல்.ஏ ரோசி அகஸ்டினின் இச்செயலுக்கு கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.