வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (13/08/2018)

கடைசி தொடர்பு:17:45 (13/08/2018)

ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு!

தலைநகர் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது சற்று நேரத்துக்கு முன்னர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். 

உமர் காலித்

’வெறுப்புணர்ச்சிக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் சார்பில், ’பயமில்லாமல் விடுதலையை நோக்கி’ எனும் தலைப்பில், டெல்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, மூத்த பத்திரிகையாளர்கள் அர்ஃபா கணும் செர்வானி, அமித் சென் குப்தா, ஜார்க்கண்ட் வழக்கறிஞர் சதாப் அன்சாரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அலி அன்வர், கேரளத்தின் சாலிடாரிட்டி யூத் மூவ்மெண்ட் இயக்கத்தின் பி.எம்.சாலிஹ், மறைந்த ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, கோரக்பூரில் பொய்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் கஃபீல் கான், ஜே.என்.யு. பல்கலை. மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் ஃபாத்திமா நஃபீஸாகியோர் உட்பட பலரும் பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே உமர் காலித் சென்றிருந்தார். தேநீர் குடிப்பதற்காக கிளப்புக்கு வெளியில் நண்பர்களுடன் உமர் காலித் நின்றிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” நாங்கள் தேநீர்க் கடையில் நின்றுகொண்டிருந்தபோது, வெள்ளைச் சட்டையில் வந்த ஒரு ஆசாமி, தள்ளியபடி வந்து உமர் காலித் மீது துப்பாக்கியால் சுட்டான். காலித் நிலைகுலைந்து விழுந்துவிட்டார். நல்லவேளை அதில் அவர் மீது குண்டு படாமல் போனது. சுதாரித்து சுட்டவனைப் பிடிக்கமுயன்றோம்.  உயரத்திலிருந்து அவன் சுடமுயன்றான்; துப்பாக்கி அவனிடமிருந்து நழுவி விழுந்துவிட்டது. அவன் தப்பியோடிவிட்டான்” என்று கூறினார். 

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற அலுவலகம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.