வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (13/08/2018)

கடைசி தொடர்பு:17:40 (13/08/2018)

`பட்டா வழங்காவிட்டால் கருணைக்கொலை செய்து விடுங்கள்'- திருநங்கைகள் குமுறல்

``தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் திருங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை. எங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும். இல்லாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள்'' என தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

திருநங்கைகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பின், திருநங்கைகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``திருநங்கையான எங்களுக்கு சரியான வேலைவாய்ப்புகள் இல்லை. போதிய வருமானமும் இல்லை. தற்போது குடியிருந்து வரும் வாடகை வீட்டுக்கும் வாடகை கொடுக்க முடியவில்லை. குடியிருப்பதற்கான இட வசதிகளும் இல்லை. எனவே, அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் தூத்துக்குடி தவிர்த்து எல்லா மாவட்டங்களிலும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து வருகிறோம். தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ள சந்தீப் நந்தூரி, கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, நெல்லை மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளித்துள்ளார்கள். தற்போது தூத்துக்குடியில் உள்ள 32 திருநங்கைகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலையில், தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளுக்கு மட்டும் வழங்கப்படாத காரணம் என்ன? ஏன் இந்தப் பாரபட்சம் எனத் தெரியவில்லை. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், பொருள்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஆகிய பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க