வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (13/08/2018)

கடைசி தொடர்பு:17:22 (13/08/2018)

துணைவேந்தர் செல்லதுரை பதவி நீக்கம் செய்தது சரியே! - உச்ச நீதிமன்றம் அதிரடி

``மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் பதவி நீக்கம் செல்லும்'' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செல்லதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து துணைவேந்தர் செல்லதுரையை நீக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செல்லதுரை மேல் முறையீடு செய்தார். ``இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும்'' என்று செல்லதுரை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஏற்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், `செல்லதுரைமீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்தது சரியானதுதான். உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள்மீது குற்றவழக்குகள் பதிவாகியிருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' எனக் கூறி செல்லதுரை வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.