ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi | Remembering versatile actress sridevi on her birth anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (13/08/2018)

கடைசி தொடர்பு:19:05 (13/08/2018)

ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi

2017 ஆகஸ்ட் 13-ம் தேதி, நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பரான பிரபல ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் மல்ஹோத்ராவின் வீட்டில்தான் ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது...ஒரு ரீவைண்ட்! #Sridevi

ந்திய சினிமாவை கிட்டத்தட்ட  50 வருடமாக நடிப்பால் அசத்தி வந்த, சகலகலாவல்லி, ஸ்ரீதேவி. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், மகள் ஜான்வியுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் நடித்திருக்கலாம். அவரின் வாழ்க்கை சரித்திரத்தில் அவரே நடித்திருக்கலாம். தன் மகளின் திரைப்படம் ரிலீஸான பின் வந்திருக்கும் தன் பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடியிருக்கலாம். இந்திய சினிமாவில் 60 வயதிலும் ஒரு ரவுண்ட் வந்திருக்கலாம். ஆனால், இந்திய சினிமா அதற்குக் கொடுத்துவைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த அவரின் மரணம், இந்திய திரையுலகில் பெரும் வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறது.

ஸ்ரீதேவி

PC: instagram.com

ஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 13), அவரைப் பல வகையில் நினைவுகூர்ந்து, சமூக வலைதளங்களில் பதிவுகளும் அவருடனான நினைவுகளும் பிரபலங்கள் பகிரப்பட்டு, #Sridevi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறது. மூத்த மகள் ஜான்வி கபூர், தன் இன்ஸ்டா பக்கத்தில், அம்மா ஸ்ரீதேவியுடனும் அப்பா போனிகபூருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

ஸ்ரீதேவி

PC: instagram.com/janhvikapoor

2017 ஆகஸ்ட் 13-ம் தேதி, நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பரான பிரபல ஆடை வடிவமைப்பாளர், மனிஷ் மல்ஹோத்ராவின் வீட்டில்தான் ஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகைகள் ரேகா, ராணி முகர்ஜி, வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய், ஷபனா அஸ்மி, பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் அந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது, அவர் நடித்த 'மாம்' திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றிருந்தது. அவரின் மகள் ஜான்வியின் பாலிவுட் என்ட்ரி குறித்த செய்திகளும் வெளிவந்துகொண்டிருந்தன.

ஜான்வி

PC: instagram.com/sridevi.kapoor

அந்தப் பிறந்தநாள் நிகழ்ச்சியில், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூருடன் நடனமாடுவதும், போனி கபூருக்கு முத்தமிட்டு மகிழ்வதும் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுவதும் எனக் குதூகலத்துடன் இருந்தார் ஸ்ரீதேவி. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ஸ்ரீதேவி

PC: instagram.com/sridevi.kapoor

 

ஸ்ரீதேவி பற்றி பாலிவுட்...

ஒருமுறை நடிகை ஐஸ்வர்யா ராய், “ஸ்ரீதேவியின் குணத்துக்கு ஈடு எவருமில்லை. இன்றும் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிவார்'' என்று தெரிவித்திருந்தார்.

கஜோல்

PC: .instagram.com/kajol

நடிகை கஜோல், “நான் எப்போதெல்லாம் அவரைச் சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் அவரை ஆக்டிங் பள்ளி ஒன்றைத் திறக்குமாறு வலியுறுத்துவேன். அவருக்கு தன்னுடைய வேலையைப் பற்றி முழுக்க முழுக்க தெரியும். கேமரா முன் எப்படி நிற்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும், தன் உடம்பை எப்படிக் குறைக்க வேண்டும், எப்படி ஒருவரை எதிர்கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி ஒளிர வேண்டும், எப்போது முகத்தில் பொலிவை வெளிப்படுத்த வேண்டும் எனப் பல விஷயங்கள் தெரியும். பல நடிகர்கள் இதற்கெல்லாம் முக்கியத்துவம் தரமாட்டார்கள். நான் அவரின் தீவிர ரசிகை. அவர் பள்ளி ஆரம்பித்தால், நான்தான் முதல் மாணவியாகச் சேருவேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன” என நெகிழ்ந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, “நடிப்பு கடவுள் என்றால், ஸ்ரீதேவியைக் கோயில் என்றுதான் சொல்ல வேண்டும்!” எனப் புகழ்ந்திருக்கிறார்.

துபாய்

போனிகபூரின் சகோதரரான அனில் கபூர், “ஸ்ரீதேவி இந்தியாவின் சார்லின் சாப்ளின்!” என்று ஒரு பேட்டியில் புகழ்ந்திருக்கிறார்.

ஐந்து வயதிலிருந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகை அசத்திய இந்த மகா நடிகை, இந்திய திரையுலக வரலாற்றில் என்றும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார் என்பது நிச்சயம்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்