``ஆகாரம் இல்லா, வீடு இல்லா, உறங்கான் பட்சம் இல்லா... எண்ட குருவாயூரப்பா” - கேரளாவிலிருந்து கதறல் | We have lost everything, pleads a Kerala family

வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (13/08/2018)

கடைசி தொடர்பு:20:36 (13/08/2018)

``ஆகாரம் இல்லா, வீடு இல்லா, உறங்கான் பட்சம் இல்லா... எண்ட குருவாயூரப்பா” - கேரளாவிலிருந்து கதறல்

“ஆபீஸிலிருந்து வெளியே போகமுடியாத நிலை. நேத்து வெளியில் போக முயற்சி செஞ்சப்போ, என் கண்ணு முன்னாடியே மரம் விழுந்து ஒரு லாரி டிரைவர் பலியாகிட்டார். பயத்துல ஆபீஸுக்கே வந்துட்டேன்”

``ஆகாரம் இல்லா, வீடு இல்லா, உறங்கான் பட்சம் இல்லா... எண்ட குருவாயூரப்பா” - கேரளாவிலிருந்து கதறல்

கேரளாவைச் சூழ்ந்த வெள்ளம்

``பிள்ளாரா வச்சு நங்களுக்கு உறங்கான் பட்சம் இல்லா. ஆகாரம் இல்லா, வீடு ஒண்ணும் இல்லா முழுக்கா வெள்ளப் பெருக்குண்டு எண்ட குருவாயூராப்பா” என வெடித்து அழும் கேரளாவைச் சேர்ந்த ஆண்டம்மாளின் கண்ணீர், ஒட்டுமொத்த கேரளாவின் நிலையை கண் முன்னே வெளிப்படுத்தி உள்ளத்தைக் கரைக்கிறது.

``போனில் சார்ஜ் குறைச்சுண்டு” என ஆண்டம்மாளிடமிருந்து போனை வாங்கும் கணவர் முருகன், நம்மிடம் பேசுகிறார்.

``நான் தமிழ்தான். பொழப்புக்காக இங்கே வந்து கல்யாணம் செய்து செட்டில் ஆகிட்டேன். ஒரு தமிழன் இன்னொரு மாநிலத்தில் செட்டில் ஆகிறது எவ்வளவு கஷ்டம்னு வெளிமாநிலத்தில் வேலை பார்க்கிறவங்களுக்குப் புரியும். படாத பாடு பட்டு, சிறுகச் சிறுக காசு சேர்த்து வாங்கின வீடு, இன்னைக்கு வெள்ளத்துல கரைஞ்சு போச்சு. இந்த இழப்பைச் சரிசெய்ய என் உசுரு இருக்கிற வரை உழைச்சாலும் போதாது” எனக் கதறுகிறார்.

``எனக்கு இரண்டு பசங்க, ஒரு பொண்ணு. இப்போ நாங்க எல்லோரும் முகாமில்தான் தங்கியிருக்கோம். பயங்கர குளுருல நைட் முழுக்க தூங்க முடியலை. அழகு நிறைஞ்ச கேரளா, இன்னைக்கு பொணக்காடா மாறியிருக்கு. நாங்க சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது. முகாமில் எத்தனையோ பொண்ணுங்க கைக்குழந்தைகளை வெச்சுட்டு கஷ்டப்படுறாங்க. நிறைய பொண்ணுங்களுக்கு மாதாந்திர பிரச்னைகள் இருக்கு. சுற்றியும் ஆம்பளைகள் இருக்கிற இடத்துல இதெல்லாம் சமாளிக்கிறது சாதாரணமா. யார் யாரோ உறவுக்காரங்க மாதிரி பழகறாங்க. முகாமில் இருக்கும் 500 பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா,  உறவுகளா ஆகிட்டோம். வெள்ளம் வந்துதான் அன்பைப் புரியவைக்கணும்னு இருக்கு. சென்னையில் வெள்ளம் வந்ததை டிவியில் பார்த்துட்டு நிறைய பேரு சேர்ந்து உதவி பண்ணினோம். இப்போ, எங்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து உதவிகள் வருது. மனிதாபிமானத்தால்தான் கேரளா இன்னும் உயிரோடு இருக்கு. இது எத்தனை நாள் நீடிக்கும்னு தெரியலை'' எனக் கண்ணீர் வீடுகிறார். 

கேரளாவை பாதித்த பெருவெள்ளம்

``கடந்த 2015 சென்னை வெள்ளத்தின்போது நான் போரூர்லதான் சகோ இருந்தேன். வேலை தேடிட்டிருக்கும்போதே வெள்ளத்தின் பாதிப்பை அனுபவிச்சவன். ரெண்டு மூணு நாளாகச் சாப்பிடாமல், தூங்காமல் அப்போவே சாவு பயத்தைப் பார்த்தவன். 'போதும்டா சாமி! இனி சென்னையே வேணாம்'னு சொந்த ஊரில் செட்டில் ஆகியிருந்தேன். கேரளாவில் வேலை கிடைச்சதும், இயற்கையின் பூமிக்குப் போறோம்னு துள்ளிக் குதிச்சு வந்தேன். ஆனால், இங்கேயும் வெள்ளம் வந்துடுச்சு. தமிழ்நாட்டுல உடனே ஓடிவந்து உதவறதுக்கு சொந்த பந்தங்க இருந்தாங்க. இங்கே வேலை பார்க்கிற இடத்தின் நண்பர்களைத் தவிர வேற யாருமே இல்லீங்க. நல்லபடியா திரும்ப ஊர்ப்போய்ச் சேரணும்” என நடுக்கத்துடன் பேசும் தோனி தொடர்ந்து,

``அஞ்சு நாளைக்கு முன்னாடிகூட இந்த அளவுக்குப் பாதிப்பில்லே. நாள் நகர நகர பாதிப்பு அதிகமாகிட்டே போகுது. ஆபீஸை விட்டு வெளியில் போகவே முடியலை. சேமிப்பு உணவுப் பொருள்களும் தீர்ந்துட்டது. அக்கம்பக்கத்துல இருக்கும் வீடுகளிலிருந்துதான் ஏதாவது செஞ்சித் தராங்க. கோழிக்கோட்டுல இருக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகளுக்குப் பயங்கர பாதிப்பாம். வீட்டில் உள்ளவங்களுக்கும் உதவ முடியாம நானும் நண்பரும் அலுவலகத்திலேயே மாட்டிக்கிட்டோம். சீக்கிரம் மழைவிட்டு வெள்ளம் வடியணும். பத்து நாளைக்கு லீவு போட்டு ஊருல போய் தங்கிட்டு வரணும்” எனப் பதற்றம் குறையாமல் பேசுகிறார்.

கேரளாவிலிருந்து கதறல்

காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷரத், ``நாட்டிலே ஒரே பிரச்னையாக இருக்கு. பயங்கர வெள்ளப்போக்கு. என் வீட்டுக்குப் பக்கத்துல வீடு இடிஞ்சு அஞ்சு பேர் மரிச்சுட்டாங்க. என் வீட்டுல உள்ளவங்களுக்கு உதவ முடியாமல் தவிச்சு கிடக்கு. ஆபீஸிலிருந்து வெளியே போகமுடியாத நிலை. நேத்து வெளியில் போக முயற்சி செஞ்சப்போ, என் கண்ணு முன்னாடியே மரம் விழுந்து ஒரு லாரி டிரைவர் பலியாகிட்டார். பயத்துல ஆபீஸுக்கே வந்துட்டேன். எல்லா அத்தியாவசியங்களும் முடங்கிக் கிடக்குது. இதெல்லாம் சீக்கிரமே தீர்ந்துடும்னு நம்பிக்கை இருக்கு. நாளைக்கு எப்படியாவது வீட்டுக்குப் போயிடணும். தங்கை என்னைக் காணாது தவிப்பா” என்கிறார்.

இயற்கையின் பெருங்கொடை கேரளா. அது தனக்குரிய வனப்புடன் மீண்டுவரும் நம்பிக்கை இருக்கிறது. அதற்கு, கைகோப்போம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் நம் அண்டை மாநிலத்தவரைக் கரை சேர்ப்போம்.


டிரெண்டிங் @ விகடன்