வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (14/08/2018)

கடைசி தொடர்பு:08:10 (14/08/2018)

ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிப் பிரமுகர் சுட்டுக் கொலை..! பீகாரில் பதற்றம்

பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிஷ் சஹானி. இவர், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் பிரமுகர். இந்தக் கட்சியின் அலுவலகம் ஜந்தாஹா பகுதியில் அமைந்திருக்கிறது. அங்கு, கட்சிப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த மனிஷ் மீது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொலையாளிகள் டூவிலரில் தப்பிவிட்டனர். 

ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி பிரமுகர் கொலை

கட்சியின் பிரமுகர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரியும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, அக்கட்சியின் தலைவரான உபேந்திரா குஷ்வா, ``முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றவாளிகளைக் கைதுசெய்து, உரிய முறையில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் அம்மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.