காணாமல் போன இந்தியர்... 36 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை! | Gajanand Sharma, who was imprisoned at Lahore Jail for past 36 yrs, released by Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (14/08/2018)

கடைசி தொடர்பு:09:30 (14/08/2018)

காணாமல் போன இந்தியர்... 36 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை!

36 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கஜனந்த் சர்மா, நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். 

கஜனந் சர்மா விடுதலை

பாகிஸ்தானில் இன்று சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவித்துள்ளது அந்நாட்டு அரசு. விடுதலைசெய்யப்பட்ட 30 பேரில் 27 பேர் மீனவர்கள். இவர்கள் அனைவரும் நேற்று பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் சிறைகளில் இருந்து வெளியே வந்தனர். 

அவர்களில் 76 வயதான கஜனந்த் சர்மாவும் ஒருவர். ஜெய்ப்பூரை சேர்ந்த இவர், 1982-ம் ஆண்டு காணாமல்போனதாகத் தன் குடும்பத்தினரால் கருதப்பட்டார். அதன்பின், நீண்டநாள்களாகத் தேடியும் அவர் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவரின் குடும்பத்தாருக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து சில ஆவணங்கள் சர்மாவின் வீட்டுக்கு வந்துள்ளன. அப்போதுதான் தெரிந்தது அவர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்று. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து சர்மா விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கஜனந் சர்மா

சர்மா, சட்டவிரோதமாகக் குடியேறுதல் என்ற வழகின் கீழ் கைதுசெய்யப்பட்டார். ஆனால், இவரின் சொந்த ஊர் ஜெய்ப்பூரில் உள்ள ஃபாதேராம் கா டிபா என்ற கிராமம். இது, இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருந்து 800 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் எப்படி பாகிஸ்தான் சென்றார் என்ற எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை. முன்னதாக, இவருக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பஞ்சாப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷெதேவ் சர்மா தான் கஜனந்த் சர்மாவை லாகூர் சிறையிலிருந்து அடாரி - வாஹா இடையே கொண்டுவந்து சேர்த்தார். இதுபற்றி ஷெதேவ் சர்மா கூறும்போது, “ இந்தியர்கள் விடுதலை, நம் நாட்டுக்கு சிறந்ததொரு சுதந்திர தினப் பரிசு” என்று தெரிவித்துள்ளார்.